Published : 15 May 2018 04:14 PM
Last Updated : 15 May 2018 04:14 PM

தமிழ் எதிர்ப்பாளர் ‘வாட்டாள் நாகராஜ்’ டெபாசிட் இழந்து படுதோல்வி

 

கர்நாடக மாநிலத்தில் காவிரி நதி பிரச்சினையையையும், கன்னட மக்கள், மொழி ஆகியவற்றை கையில் எடுத்து அரசியல் செய்து வந்த வாட்டாள் நாகராஜ் சாம்ராஜ்நகர் தொகுதியில் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தார்.

கர்நாடகத்துக்காகவும், கன்னட மொழிக்காவும், கன்னடர்களாகவும் குரல் கொடுப்பதாக சொல்லிக்கொள்ளும் வட்டாள் நாகராஜ், கர்நாடகா சாலுவாலி வாட்டாள் பக்ஷா எனும் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

சாம்ராஜ்நகரின் முன்னாள் எம்எம்எல்ஏவான வாட்டாள் நாகராஜ் தமிழர்களுக்கு எதிராகவும், காவிரி நதிநீர் பிரச்சினையிலும் பல்வேறு போராட்டங்களை கர்நாடகத்தில் நடத்தியுள்ளார்.

கர்நாடகத்தில் காவிரிப்பிரச்சினை தலைதூக்கும் போது, தமிழ் திரைப்படங்களை திரையிடவிடாமல் செய்து, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதிலும், தமிழர்களின் வாகனங்கள், சரக்கு வாகனங்களை தாக்குதவதிலும் வாட்டாள் நாகராஜ் கட்சியின் ஆதரவாளர்கள் முக்கியபங்கு வகிப்பார்கள்.

கடந்த 1962-ம் ஆண்டு பெங்களூரில் அலங்கார் தியேட்டர் எரிப்பு சம்பவத்தில் வாட்டாள் நாகராஜ் தீவிரமாக இருந்து அவரும், அவரின் ஆதரவாளர்களும் சிறை சென்றனர். அதன்பின் வாட்டாள் நாகராஜ் கர்நாடக மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். அதன்பின் கன்னட மொழிக்காகவும், மக்களுக்காகவும் போராட கடந்த 1996-ம் ஆண்டு கன்னட சாலிவாலிகரு எனும் அமைப்பை வாட்டாள் நாகராஜ் தொடங்கினார்.

அதன்பின் 1980ம் ஆண்டு கர்நாடகாவில், சமஸ்கிருதமொழி கல்விதிட்டத்தில் சேர்க்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து நடிகர் ராஜ்குமார் நடத்தியபோராட்டத்தில் வாட்டாள் நாகராஜும் கலந்து கொண்டு பெரிய களேபரத்தை ஏற்படுத்தினார். அதில் பரவலாக வாட்டாள் நாகராஜ் அறியப்பட்டார்.

கர்நாடாக, தமிழகத்துக்கு இடையிலான காவிரி நதிநீர் பிரச்சினை, கர்நாடகம், கோவா இடையிலான மகதாயி நதிநீர் பிரச்சினை, மஹாராஷ்டிரா மாநிலத்துடனான எல்லைப்பிரச்சினை அனைத்திலும் வாட்டாள் நாகராஜின் அமைப்பினர் போராட்டம் நடத்துவதிலும், கடையடைப்பு நடத்துவதும் முதல் ஆளாக இருப்பார்கள். மேலும் பெங்களூருவில் தமிழ்திரைப்படங்கள் திரையிடக்கூடாது என்று அவ்வப்போது போராட்டம் நடத்தி மக்களின் கவனத்தை திசை திருப்புவார் வாட்டாள் நாகராஜ்.

இந்நிலையில், 2018-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாட்டாள் நாகராஜ், கர்நாடகா சாலுவாலி வட்டாள் பக்ச கட்சி போட்டியிட்டது. இவரின் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வேடிக்கையாக இருந்தது.

அதாவது, ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு இலவசமாக தலைமுடி வெட்டிவிடுதல், முகச்சவரம் செய்தல், கழுதைகள் வளர்ப்புக்கு முக்கியத்துவம், கழுதையை தேசிய விலங்காக அறிவித்தல், எருமைமாடுகளை வளர்க்கும் திட்டம், காதல் திருமணம் செய்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி, ரிக்்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட், சீருடைகள், வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கு முக்கியத்துவம், கிராமக் கோயில்களை சீரமைத்தல், திருநங்கையினருக்கு சிறப்பு உதவித்திட்டங்கள், பெங்களூரில் 20 ஆயிரம் கழிவறைகள் கட்டுதல், கன்னடமொழியை நிர்வாக மொழியாக அறிவித்தல் போன்றவ தேர்தல் வாக்குறுதிகளாகும்.

இந்த தேர்தலில் சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ், 5 ஆயிரத்து 977 வாக்குகள் மட்டும் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x