Published : 15 May 2018 12:42 PM
Last Updated : 15 May 2018 12:42 PM

கர்நாடகாவில் 30 ஆண்டுகளாக ஒரே கட்சி தொடர்ச்சியாக இருமுறை ஆட்சியமைத்ததில்லை; காங்.தோல்விக்குக் காரணம் என்ன?

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜக ஆட்சியமைப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது, பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் எந்த இந்திய தேர்தலிலும் இல்லாத அளவுக்கு காங்கிரஸ், பாஜக போட்டிப் போட்டுக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டன. 224 தொகுதிகளுக்கான தேர்தலில் 2 தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதால், 222 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்தது, இதில் பாஜக 112 இடங்களில் முன்னிலை பெற்று பெரும்பான்மை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

தேர்தல் முடிவுகள் குறித்து சில முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்:

* ஆளும் கட்சி மீண்டும் ஜெயித்ததாக கர்நாடகாவில் கடந்த 30 ஆண்டுகளாக வரலாறு இல்லை. 30 ஆண்டுகளாக எந்தக் கட்சியும் அடுத்தடுத்த தேர்தல்களில் வென்று ஆட்சியமைத்ததில்லை.

* தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தொங்கு சட்டசபை என்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சியமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றெல்லாம் செய்திகள் எழுந்தன, பாஜக வெற்றி மூலம் மக்கள் இத்தகைய கருத்துக் கணிப்புகளை முறியடித்துள்ளனர்.

* பிரதமர் மோடி கர்நாடகாவில் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடுமையாகப் பிரச்சாரம் செய்தார். இந்தப் பிரச்சாரமும் மக்களின் அதிருப்தி அலையும் ஒன்றாக பாஜக சார்பாக வாக்குகள் விழுந்துள்ளன, முழுக்கவும் மோடி அலை என்று கூறுவதற்கில்லை.

* பாஜக முதல்வர் என்று கருதப்படும் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு வயது 75, மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டில் 2013-ம் ஆண்டு பதவியைத் துறக்க வேண்டியிருந்தது. கோபத்தில் பாஜகவை விட்டு வெளியேறினார், ஆனால் கோபம் ஓராண்டுக்கு மேல் நீடிக்கவில்லை அடுத்த ஆண்டே கட்சியில் மீண்டும் இணைந்தார்.

* விவசாயிகளின் துயரம், வேலைவாய்ப்பின்மை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றினால் மக்களுக்கு பாஜக அரசு மீதிருந்த அதிருப்தியை காங்கிரஸால் வாக்காக மாற்ற முடியவில்லை. 2014 முதல் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டும் காங்கிரஸ் மிகப்பெரிய தோல்விகளையே சந்தித்து வருகிறது. குறிப்பாக குஜராத் தேர்தலின் போது ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராவார் என்று உற்சாகச் செய்திகள் கட்சிக்காரர்களை ஊக்குவிக்க குஜராத் தேர்தலில் உத்வேகத்துடன் காங்கிரஸ் பணியாற்றியது, ஆனால் காங்கிரஸ் தலைவராக பதவியேற்றவுடன் வெளியான குஜராத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு பெருமளவு ஊக்கமளித்தாலும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை, இப்போது முழுநேரத் தலைவரான பிறகு மீண்டும் ஒரு தோல்வியை காங்கிரஸ் சந்தித்துள்ளது.

* லிங்காயத்துகள் மீதான பாஜகவின் பிடியை தளர்த்த முதல்வர் சித்தராமையா அப்பிரிவினரை தனி மதமாக அங்கீகரிப்பதாக அறிவித்தது, ஆனால் பாஜக இதனை பிரித்தாளும் சூழ்ச்சி என்று விமர்சித்தது, கடைசியில் லிங்காயத்துக்கள் பாஜகவுக்கு விசுவாசமாக மாறிவிட்டனர், லிங்காயத்துக்கள் அதிகாரமிக்கவர்கள் மற்றும் செல்வந்தர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* அ-ஹிந்தா என்ற முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட சாதியினர், தலித்துகள் ஆகிய சிறுபான்மையினரை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கு சித்தராமையா பெயர் பெற்றவர். ஆனால் 224 தொகுதிகளில் எஸ்.சி/எஸ்.டி.க்கள் 62 தொகுதிகளை தீர்மானிப்பவர்கள் இவர்கள் காங்கிரஸுடன் உறவை முறித்துக் கொண்டனர். இவர்கள் மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் சென்றது, மாயாவதி என்ற தலித் தலைவரால்தான் என்று கூறப்படுகிறது, ஆகவே காங்கிரஸ் இதிலும் தோல்வியடைந்துள்ளது.

* நகர்ப்புறம் நீங்கலாக கிராமப்புற பிரச்சினைகள் சிக்கல்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்தன, காவிரி நதிநீரை நம்பியிருக்கும் தெற்கு கர்நாடகத்தில் உள்ள விவசாயிகள் காங்கிரஸ் மீதான தங்கள் ஆதரவை கடுமையாக முறித்துக் கொண்டதும் காங்கிரஸ் தோல்விக்குக் காரணமாக அமைந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x