Published : 15 May 2018 08:14 AM
Last Updated : 15 May 2018 08:14 AM

உலக மசாலா: குரங்குகளின் தந்தை

சீ

னாவின் திபெத் தன்னாட்சி பகுதியில் அரிய வகை மக்காக் குரங்குகள் வசித்து வருகின்றன. 18 ஆண்டுகளுக்கு முன்பு 50 குரங்குகளே இருந்தன. இன்றோ 2,800 குரங்குகளாகப் பெருகிவிட்டன. இதற்குக் காரணம் 69 வயது Dobrgyal. வனக் காப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற இவரை, ‘குரங்குகளின் தந்தை’ என்று அன்போடு அழைக்கிறார்கள். தினமும் 5 கி.மீ. தூரம் பயணித்து, குரங்குகளுக்குத் தேவையான உணவுகளை மூட்டைகளில் கொண்டுவந்து இறக்குகிறார். இவரைக் கண்டவுடன் குரங்குகள் ஓடி வருகின்றன. இவர் மீது ஏறி விளையாடுகின்றன. உடல்நலம் சரியில்லாத குரங்குகளை வீட்டுக்கு அழைத்துச் சென்று, சில நாட்கள் மருத்துவம் பார்த்து, பிறகு இங்கே கொண்டுவந்து விட்டுவிடுகிறார். மக்காக் குரங்குகளை சீனா அரிய விலங்கினமாக அறிவித்து, பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனாலும் இவர் தனிப்பட்ட ஆர்வத்தில் சொந்த செலவில் உணவுகளை வழங்கி வருகிறார். தற்போது இந்தப் பகுதியை நோக்கி சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகிறார்கள். “எனக்கு வயதாகிவிட்டது. நான் இருக்கும் காலம் வரை குரங்குகளுக்கு உணவூட்டுவேன். அதற்குப் பிறகு என் மகன்கள் இந்தப் பணியைத் தொடருவார்கள் என்று நம்புகிறேன்” என்கிறார் இவர்.

அரிய மனிதர்!

ட பசிபிக் கடல் பகுதியில் இருக்கும் மிட்வே தீவில் ஆல்பட்ராஸ் என்ற அழகான கடற்பறவைகள் வசிக்கின்றன. இங்கு குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை தெரியாமல் உண்டு, ஏராளமான ஆல்பட்ராஸ் பறவைகள் உயிரிழக்கின்றன. இதை அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ் ஜோர்டன், ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். தாயும் குஞ்சுகளுமாக இறந்துபோன ஆல்பட்ராஸ் பறவைகளின் வயிற்றுக்குள் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதைப் பார்க்கும்போது மனம் பதறுகிறது. “இந்தத் தீவுக்கு அருகில் இருக்கும் கண்டமே வெகு தொலைவில் இருக்கிறது. அங்கிருந்து இந்தத் தீவுக்கு வந்து சேரும் பிளாஸ்டிக் கழிவுகளே இவ்வளவு என்றால், மக்கள் வசிக்கும் கடல் பகுதிகளில் எவ்வளவு கழிவுகள் இருக்கும் என்பதை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. பிளாஸ்டிக் பயன்பாடு மக்களோடு கலந்துவிட்டது. பெரும்பாலான பிளாஸ்டிக் கழிவுகள் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடியவை. இந்த ஆவணப்படத்தைப் பார்க்கும் பலரும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதாகச் சொல்கிறார்கள். மகிழ்ச்சிதான். ஆனால் தனிநபர்கள் இப்படிச் செய்வதால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது. 10 கோடி பேர் பிளாஸ்டிக்கைக் கைவிட்டால் ஓரளவு மாற்றத்தைக் காண முடியும். பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஆல்பட்ராஸ் மட்டுமில்லை, கடல் வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் இங்கே வந்து படம் பிடித்திருக்கிறோம். மொத்தம் 92 நாட்களில் 400 மணி நேரம் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. கடந்த மாதம் இந்த ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறோம். விழித்துக்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்” என்கிறார் கிறிஸ் ஜோர்டன்.

அச்சமூட்டும் பிளாஸ்டிக் மாசு…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x