Published : 15 May 2018 08:07 AM
Last Updated : 15 May 2018 08:07 AM

உ.பி., உத்தராகண்ட், டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் புழுதிப் புயல், கனமழைக்கு 80 பேர் பலி

உ.பி., டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் நேற்று முன்தினம் வீசிய புழுதிப் புயல் மற்றும் கனமழைக்கு மொத்தம் 80 பேர் பலியாகினர். 136 பேர் காயம் அடைந்துள்ளனர்.

உ.பி., உத்தராகண்ட், டெல்லி, மேற்கு வங்கம், ஆந்திரா ஆகிய 5 மாநிலங்களில் நேற்று முன்தினம் மாலையில் கடும் புழுதிப் புயலும் இதைத் தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்தது. இது கடும் சேதம் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 5 மாநிலங்களிலும் 80 பேர் இறந்தனர். உ.பி.யில் மட்டும் 51 பேர் இறந்தனர்.

டெல்லியில் 109 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதையடுத்து மழையுடன் கூடிய புயல் வீசியது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதில் இரவு 7.30 மணி வரை மட்டும் மரங்கள் சாய்ந்ததாக டெல்லி போலீஸாருக்கு 189 அழைப்புகள் வந்தன. கம்பங்கள் விழுந்ததாக 40 அழைப்புகளும் கூரை விழுந்ததாக 31 அழைப்புகளும் வந்தன.

டெல்லி விமான நிலையத்தில் இருந்து 40 விமானங்கள் மாற்றிவிடப்பட்டன. மெட்ரோ ரயில் சேவை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே ஆந்திரா முதல் ஜம்மு காஷ்மீர் வரை அனைத்து மாநிலங்களுக்கும் அடுத்த 72 மணி நேரத்துக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் லேசான மழை முதல் புயலுடன் கூடிய கனமழை வரை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஆந்திராவில் 13 பேர் பலி

இதனிடையே ஆந்திராவில் மட்டும் கனமழைக்கு13 பேர் பலியாகினர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று முன்தினம் பரவலாக புழுதிப் புயலும் அதைத் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்தது. இதில் இடி, மின்னல் தாக்கி ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 8 பேர், விசாகப்பட்டினத்தில் ஒருவர், கடப்பாவில் 2 பேர் உட்பட மாநிலம் முழுவதும் 13 பேர் உயிரிழந்தனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காணொலி வசதி மூலம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர், “இயற்கை பேரிடரில் இருந்து மக்களை காக்க தகவல் தொழில்நுட்பத்தை மேலும் சிறப்பாக நாம் பயன்படுத்த வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x