Last Updated : 15 May, 2018 08:05 AM

 

Published : 15 May 2018 08:05 AM
Last Updated : 15 May 2018 08:05 AM

கர்நாடகாவில் இன்று வாக்கு எண்ணிக்கை

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. பிற்ப‌கல் 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் எனத் தெரியவரும்.

கர்நாடகாவில் கடந்த 12-ம் தேதி 222 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் உட்பட‌ 2622 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ், மஜத, இந்திய குடியரசு கட்சி, அதிமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சார்பாக 30 தமிழர்களும் களமிறங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சி 221, பாஜக 222, மஜத 199 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன.

வரும் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக நடந்த கர்நாடக தேர்தலில் வெல்ல காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் கடுமையாக போராடின. இதனால் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தேசிய‌ தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி தீவிர பிரச்சாரத்தில் மேற்கொண்டிருந்தனர்.

பலத்த பாதுகாப்பு

முதல்வர் சித்தராமையா போட்டியிடும் சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய தொகுதிகளில் முறையே மஜத வேட்பாளர் ஜி.டி.தேவகவுடா, பாஜக வேட்பாளர் ஸ்ரீராமலு அவருக்கு கடும் போட்டியை கொடுத்தனர். இதே போல சிவாஜிநகர் தொகுதியில் தற்போதைய அமைச்சர் ரோஷன் பெய்கிற்கும் (காங்கிரஸ்), முன்னாள் அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடுவுக்கும் (பாஜக) பலத்த போட்டி நிலவுகிறது.

கடந்த 12-ம் தேதி 222 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 72.13 சதவீத வாக்குகள் பதிவாகின. கர்நாடகா முழுவதும் 58, 302 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 75 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டிகளில் வைத்து சீல்வைக்கப்பட்டு, மாநிலத்தின் 38 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த மையங்களுக்கு 24 மணி நேரமும், ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை

பெங்களூருவில் உள்ள‌ 5 மையங்கள் உட்பட கர்நாடகா முழுவதும் உள்ள 38 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க, வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 8 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முன்னிலை விவரம் படிப்படியாக அறிவிக்கப்படும். இதில் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி நிலவரம் பகல் 12 மணிக்குள் தெரிந்துவிடும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் வெல்லும் என பெரும்பாலான முடிவுகள் வந்தன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் 9-ல் 7, பாஜக வெல்லும் என்று தெரிவித்துள்ளது. இரண்டு முறையும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்கள் கிடைக்காது. அதனால் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்பு உள்ளது என்று கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஆட்சி போகும் கட்சி எது என நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x