Published : 12 May 2018 03:02 PM
Last Updated : 12 May 2018 03:02 PM

இங்கிலாந்து இளவரசரின் திருமணத்தை வித்தியாசமாகக் கொண்டாடும் மும்பை டப்பாவாலாக்கள்

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் திருமணத்தை மும்பை டப்பாவாலாக்கள் வித்தியாசமான முறையில் கொண்டாட இருக்கின்றனர்.

மும்பை டப்பாவாலாக்கள் என அழைக்கப்படுவோர், மும்பை அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு மதிய உணவு எடுத்துச்செல்லும் பணி செய்பவர்கள் ஆவர். மும்பை முழுவதும் ஏறக்குறைய 2 லட்சம் பேருக்கும் அதிகமாக ஒரேநாளில் சாப்பாடு அவர்களின் வீடுகளில் இருத்து டப்பாவாலாக்களால் எடுத்துவரப்பட்டு வழங்கப்படுகிறது.

எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் சாப்பாடு டப்பாக்கள் மீண்டும் உரியவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்தத் தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கும் (டயானாவின் மகன்), ஹாலிவுட் நடிகை மேஹன் மார்கலுக்கும் வரும் 19-ம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் லண்டனில் உள்ள விண்ட்சர் கேஸ்டில் அரண்மனையில் நடக்கிறது.

இந்தத் திருமணத்துக்கு தாங்கள் போக முடியாவிட்டாலும், கூட அதைச் சிறப்பாக கொண்டாட முடிவு செய்த மும்பை டப்பாவாலாக்கள் மும்பையில் உள்ள் டாடா நினைவு மருத்துவமனை, கேஇஎம் மருத்துவமனை, வாடியா மருத்துவமனை ஆகியவற்றுக்குச் சென்று நோயாளிகளின் உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட உள்ளனர்.

இது குறித்து மும்பை டப்பாவாலாக்களின் செய்தித்தொடர்பாளர் சுபாஷ் தலேக்கர் நிருபர்களிடம் கூறியதாவது:

டப்பாவாலாக்களாகிய எங்களுக்கும், இங்கிலாந்து ராஜ குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இளவரசர் சார்லஸ் அவரின் 2-வது திருமணத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன் எங்களைத் தனிப்பட்ட முறையில் அழைத்திருந்தார். நாங்கள் அங்கு சென்றிருந்தபோது, எங்களை மிகச்சிறப்பாகக் கவனித்துக்கொண்டனர், மிகுந்த மரியாதையுடன் நடத்தினார்கள்.

குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பார்க்க நீண்ட தொலைவில் இருந்து வரும் உறவினர்களுக்கு நாங்கள் தினமும் தரமான உணவுகளைச் சமைத்து இலவசமாக அளித்து வருகிறோம்.

வரும் 19-ம் தேதி இளவரசர் ஹாரியின் திருமணம் நடைபெற உள்ளது. அதைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மருத்துவமனைகளில் நோயாளிகளின் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்க இருக்கிறோம். மேலும், இங்கிலாந்து தூதரகத்திலும் இளவரசர் ஹாரிக்காக சிறப்புப் பரிசுகளையும் அளிக்க இருக்கிறோம்.

இவ்வாறு சுபாஷ் தலேக்கர் தெரிவித்தார்.

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x