Last Updated : 11 May, 2018 04:53 PM

 

Published : 11 May 2018 04:53 PM
Last Updated : 11 May 2018 04:53 PM

‘காங்கிரஸை அழிக்கலாம், அதன் சிந்தனைகள் சாகாது’: பாஜகவை விளாசிய சிவசேனா

காங்கிரஸ் இல்லாத நாடாக உருவாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். காங்கிரஸை ஒழித்துவிட முடியும், ஆனால், அதன் சிந்தனைகளை அழிக்க முடியாது என்று சிவசேனாக் கட்சி தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நாளை(12-ம் தேதி) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் 10 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டது, கோடிக்கணக்கான பணம், மதுபாட்டில்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தத் தேர்தல் குறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வில் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

பிரதமர் மோடி காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்று மேடை தோறும் பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரலாம், பாஜகவால் காங்கிரஸை ஒழிக்கக் கூட முடியும். ஆனால், காங்கிரஸ் கட்சியின் சிந்தனைகள் ஒருபோதும் சாகாது. காங்கிரஸ் கட்சியின் தகுதிகளை ஈர்த்துக்கொண்டு, அதை அழிக்க பாஜக முயல்கிறது.

கர்நாடகத் தேர்தல் சமயத்தில் 10 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் பெங்களூரில் உள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் பாஜகவை குற்றம் சுமத்துகிறது காங்கிரஸ் கட்சி. வாக்காளர் அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் கர்நாடக தேர்தல் தரம்தாழ்ந்து சென்றுவிட்டதைக் காட்டுகிறது.

கோடிக்கணக்கான பணம் இந்த தேர்தலில் புழங்குகிறது, பிடிபடுகிறது. பாஜகவுக்கு இந்த அளவுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பது ஒன்று ரகசியம் அல்ல, அனைவருக்கும் தெரிந்த உண்மைதான்.

கிராமப்பஞ்சாயத்து தேர்தல் அல்லது மக்களவைத் தேர்தல் எதுவானாலும், பணம் அதிகமாகப் புழங்குகிறது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள முத்ரா வங்கியில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவதுபோல் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பாஜக காப்பி அடித்துவிட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. பரவாயில்லை, காங்கிரஸின் கொள்கைகளை பாஜக ஏற்றுக்கொண்டு தேர்தலில் பிரச்சாரம் செய்யட்டும். தங்களின் சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டு, அதை முன்னெடுக்கும் பாஜகவை நினைத்து காங்கிரஸ்கட்சிதான் பெருமைப்பட வேண்டும்.

தங்களுடைய ஆட்சியில் தேர்தலில் எந்தவிதமான மோசடியும் நடக்காது என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது. உண்மையில், மக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை. அதில் பல்வேறு மோசடிகள் நடப்பதாகக் குற்றம்சாட்டுகிறார்கள்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அப்போது, சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்ரே இந்திரா காந்தியிடம் வெற்றி குறித்து கேள்வி எழுப்பினார். இது இந்திராவால் பெற்ற வெற்றி அல்ல, மை ஆல் பெற்ற வெற்றி என்றார்.

தேர்தலில் மை வைக்கும் ஆட்சி முடிந்துவிட்டது. இப்போது பாஜக ஆட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர மோசடி மூலம் தேர்தல் வெற்றிக்கு முயற்சிக்கிறது. இப்போது இருக்கும் தேர்தல் முறையையும், மின்னணு வாக்குப்பதிவு முறையையும் மக்கள் விரும்பவில்லை.

ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்கள் முகத்தில் இருக்கும் முகமூடிகள்தான் மாறி இருக்கின்றன. முகமூடிக்குப் பின்னால் இருக்கும் முகம் மாறவில்லை. பாஜக காங்கிரஸை தோற்கடிக்கவில்லை, ஆனால் பாஜக அதை தனக்குள் இணைத்துவிட்டது.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x