Last Updated : 11 May, 2018 08:14 AM

 

Published : 11 May 2018 08:14 AM
Last Updated : 11 May 2018 08:14 AM

ஜெம் நிறுவன வெளியேற்றத்தால் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் கைவிடப்படுமா?

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் (நீரக கரிசேமம்) எடுக்கும் திட்டத்தை ஜெம் லேபரட்டரி நிறுவனம் கைவிடத் தயாராவதாக நேற்று முன்தினம் ‘தி இந்து’வில் வெளியான செய்தி பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்தநிலையில், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் கைவிடப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

நாடு முழுவதிலும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களின் கடல் மற்றும் தரைப்பகுதிகளின் அடிப்பகுதியில் இயற்கை வளமான ஹைட்ரோ கார்பன் (நீரக கரிசேமம்) இருப்பதாக ஆய்வில் தெரிய வந்தது. ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை வளத்தில் கச்சா எண்ணெய் (க்ரூட் ஆயில்), இயற்கை எரிவாயு, மீத்தேன், ஷேல் ஆயில்(Shale Oil) மற்றும் கேஸ் ஹைட்ரேட் உட்பட சில பயனுள்ள பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கை வளங்களுக்கான இந்த ஆய்வை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் ஆகிய மத்திய அரசு நிறுவனங்கள் செய்தன. இவர்களால், பல ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கைவளம், அரசியல் உட்பட பல்வேறு காரணங்களுக்காக எடுக்க முடியாமல் கடந்த கால மத்திய அரசு கள் விட்டு வைத்தன. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடிவு செய்தது.

இதற்காக, மொத்தம் 67 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, கடந்த செப்டம்பர் 2015-ல் மத்திய அரசு முடிவு எடுத்தது. இதை தொடர்ந்து, ஹைட்ரோ கார்பன் எடுக்க சிறிய நிலப்பகுதிகளின் ஏல ஒப்பந்தம், கடந்த வருடம் பிப்ரவரி 27-ல் செய்யப்பட்டது. இதில், மத்திய அரசின் சார்பு நிறுவனங்கள் 4 இந்திய தனியார் நிறுவனங்கள் 17 மற்றும் ஒரு வெளிநாட்டு தனியார் நிறுவனம் என மொத்தம் 22 பேருடன் 31 ஒப்பந்தங்கள் இடப்பட்டன. 31-ல் நிலப்பகுதி 23 மற்றும் கடல் பகுதி 8-ம் இடம் பெற்றுள்ளன. நிலப்பகுதி யில் தமிழகத்தின் நெடுவாசல் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய இரு இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. நெடுவாசலில் ஏலம் எடுத்த பெங்களூரைச் சேர்ந்த ஜெம் லேபரட்டரி அங்கு நிலவிய எதிர்ப்பு காரணமாக இன்னும் ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியவில்லை. இதன் காரணமாக தனக்கு நெடுவாசலுக்கு பதிலாக வேறு இடம் கேட்டு மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த செய்தி நேற்று முன்தினம் ‘தி இந்து’வில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் என்னவாகும் எனும் கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், அங்கிருந்து ஜெம் நிறுவனம் வெளியேற விரும்புகிறதே தவிர, நெடுவாசல் திட்டத்தை கைவிடும் உரிமை மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது. எனவே, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து தொடருவதும் கைவிடுவதும் மத்திய அரசைப் பொறுத்ததாகக் கருதப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஜெம் நிறுவனத்தின் முது நிலை அதிகாரியும் செய்தித்தொடர்பாளருமான ஹரி பிரசாத் கூறும்போது, ‘‘ஒப்பந்தத்தின்படி தமிழக அரசு தம் சுரங்கக் குத்தகையை ஓஎன்ஜிசியிடம் இருந்து எங்களுக்கு மாற்றி அளித்தால்தான் திட்டம் துவக்கப்படும். அங்கு கடும் கடும் எதிர்ப்பு நிலவுவதால் தமிழக அரசு அதை மாற்றித்தரும் என்ற நம்பிக்கையை இழந்து வருகிறோம். இதனால் ஏற்படும் பல கோடி இழப்பை சமாளிக்கவே, எங்களுக்கு வேறு இடம் மாற்றித்தரக் கோரி மத்திய அரசிற்கு எழுதியுள்ளோம். நெடுவாசல் திட்டம் குறித்து மத்திய அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக அடையாளம் காணப்பட்ட நிலங்களில் மத்திய அரசு 67-ல் மட்டுமே ஏலம் விட முடிவு செய்திருந்தது. இவற்றில் பாக்கி உள்ள 38 இடங்களை விரைவில் மத்திய அரசு ஏலம் விட உள்ளது. அப்போது அதில் ஒரு இடத்தை ஜெம் நிறுவனம் மீண்டும் ஏல ஒப்பந்தம் இடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தனது நெடுவாசல் ஒப்பந்தத்தை ஜெம் அதிகாரபூர்வமாக கைவிட்டு விடும். இந்த 38 இடங்களும் வேறு மாநிலங்களில் உள்ளதால் மீண்டும் ஜெம் நிறுவனம் தமிழகத்தில் வேறு எந்த இடத்திலும் தம் திட்டத்தை துவங்கும் வாய்ப்புகள் இல்லை. எனினும், காவிரி படுகைகள் கொண்ட நிலங்களில் ஹைட்ரோ கார்பன் அதிக வளத்துடன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த படுகைகள் அமைந்த தமிழகத்திலும் ஹைட்ரோ கார்பன் வளம் உள்ளன. ஆனால், இவற்றில் நெடுவாசலைப் போல் துவக்கக்கட்ட ஆய்வு இன்னும் நடத்தப்படாமல் உள்ளது. இதை நடத்தினால் தமிழகத்தில் உள்ள மற்ற இடங்கள் அடையாளம் காணப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x