Last Updated : 10 May, 2018 05:48 PM

 

Published : 10 May 2018 05:48 PM
Last Updated : 10 May 2018 05:48 PM

நீதித்துறை - மத்திய அரசு மோதல் வலுக்கிறது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதி செலமேஸ்வர் திடீர் கடிதம்

உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோஸப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மூத்த நீதிபதி ஜே.செலமேஸ்வர் கடிதம் எழுதியுள்ளார்.

கேரளாவில் இருந்து போதுமான அளவு நீதிபதிகள் நியமிக்கப்பட்ட நிலையில், ஜோஸப்புக்கு வாய்ப்பளிக்க முடியாது என்று மத்திய அரசு அவரின் பெயரை நிராகரித்துவிட்டது. இந்நிலையில், கொலிஜியம் மீண்டும் ஜோஸப் பெயரை மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று தற்போது செலமேஸ்வர் குரல் எழுப்பியுள்ளார்.

கடந்த ஜனவரி 10-ம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பு, 2 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. ஒருவர்  மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, மற்றொருவர் உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப். இதில் இந்து மல்ஹோத்ராவின் பெயரை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு நீதிபதி ஜோசப் பெயரை ஏற்க மறுத்து, அவரின் பெயரை மறு பரிசீலனை செய்யக் கோரி கொலிஜியத்துக்கு திருப்பி அனுப்பியது.

நீதிபதி ஜோசப்புக்கு முன் சீனியாரிட்டி அடிப்படையில் 11 நீதிபதிகள் இருக்கிறார்கள் என்பதாலும், கேரளாவில் இருந்து போதுமான அளவில் பிரதிநிதித்துவம் கொடுத்து நீதிபதிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆதலால், தற்போது ஜோசப்பின் பெயருக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்பதால் மீண்டும் ஆய்வு செய்யவும் என்று கொலிஜியத்துக்கு மத்திய அரசு கடந்த மாதம் 26-ம் தேதி பதில் அனுப்பி உள்ளது.

இதனால், நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு அளிப்பதில் உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் உருவாகியது.

கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் தலைமை நீதிபதியாக ஜோசப் பணியாற்றி வருகிறார். அந்த மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் ஹரிஸ்ராவத் தலைமையிலான அரசில் குழப்பம் விளைவித்து, எம்எல்ஏக்களை உடைத்து ஆட்சியில் பாஜகவினர் குழப்பத்தை விளைவித்தனர்.

இதனால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்யப்பட்டு அங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், அது தொடர்பான வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப், குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து, மீண்டும் காங்கிரஸ் முதல்வர் ஹரிஸ்ராவத் ஆட்சியைக் கொண்டுவந்தார். இது அப்போது பாஜகவுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்தக் காரணத்தால் கே.எம். ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்த, மத்திய அரசு அனுமதி மறுக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

இந்நிலையில், கடந்த வாரம் கொலிஜியம் கூடி 30 நிமிடங்கள் கூடிய இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது. ஆனால், எந்தவிதமான முடிவும் எடுக்கப்படாமல், ஜோஸப் விவகாரத்தில் முடிவை ஒத்திவைக்கப்பதாக கூறப்பட்டது.

இதற்கிடையே உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ஜே. செலமேஸ்வர் கொலிஜியம் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, அதில் ஜோஸப் பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மீண்டும் பரிந்துரைக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், கொலிஜியத்தின் அவசரக்கூட்டம் நேற்று நடப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீதிபதி செலமேஸ்வர் விடுமுறையில் சென்றதால் நடக்கவில்லை. கொலிஜியத்தில் உள்ள மற்ற நீதிபதிகளான எம்.பி. லோக்கூர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகாய் ஆகியோரும் கூட்டத்துக்குச் செல்லவில்லை.

இதற்கிடையே கடந்த வாரம் கேரளாவுக்குச் சென்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப், உத்தரகாணட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசஸப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்துவதற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

கொலிஜியம் கூட்டம் கூட்டுவதற்குக் குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வமான உத்தரவும் இல்லாத நிலையில், செலமேஸ்வர் கடிதத்தைத் தொடர்ந்து தேதி முடிவு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

ஒருவேளை கொலிஜியம் மீண்டும் கூடி நீதிபதி ஜோஸப் பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக அரசுக்கு மீண்டும் பரிந்துரைக்கும் பட்சத்தில் அதை நிராகரிக்க அரசுக்கு உரிமை இல்லை. அதே ஏற்றுச் செயல்படுத்த வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x