Last Updated : 10 May, 2018 03:45 PM

 

Published : 10 May 2018 03:45 PM
Last Updated : 10 May 2018 03:45 PM

2019 தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக ராகுல் இருப்பார்: எதிர்கொள்ளத் துணிச்சல் இருக்கிறதா?- சிவசேனா கேள்வி

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ராகுல் காந்தி மிகப்பெரிய சவாலாக இருப்பார். அவரின் சவாலை ஏற்று, அவரை வெற்றி கொள்ளும் துணிச்சல் அந்தக் கட்சிக்கு இருக்கிறதா என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றபின், மிகவும் உற்சாகத்துடன், உத்வேகத்துடனும் செயல்பட்டு வருகிறார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் பலகட்ட பிரச்சாரங்களை ராகுல் காந்தி செய்தார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் பதில் அளிக்க முடியாமல் சிலநேரங்களில் மோடி தனிநபர் தாக்குதல்களிலும் ஈடுபட்டதைக் காண முடிந்தது. இந்நிலையில், வரும் 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு ராகுல் காந்தி கடும் போட்டியாளராக இருப்பார் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான ‘சாம்னா’வில் ராகுல் காந்தியின் எழுச்சி குறித்து தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''2019-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராகத் தான் இருப்பேன் என்று ராகுல் காந்தி வெளிப்படையாகச் சவால் விடுத்துள்ளார். பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றினால் நானே பிரதமராக வருவேன் என்றும் தெரிவித்து இருக்கிறாரர்.

ராகுல் காந்தியின் துணிச்சலையும், பிரதமர் பதவிக்கான ஆசையையும் பாஜகவினர் வரவேற்க வேண்டும். அதைவிடுத்து, இந்த நாடு, ஒருபோதும் முதிர்ச்சியில்லாத, புகழ்பெற்ற தலைவர்களை பிரதமர் பதவிக்கு ஏற்றுக்கொள்ளாது என பிரதமர் மோடி கூறுகிறார்.

நாங்கள் கேட்கிறோம், பிரதமர் யார் என்பதை முடிவு செய்வது, பாஜக அல்ல. மக்கள்தான். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டுமா அல்லது தோற்க வேண்டுமா என்பதை முடிவு செய்வது மக்கள்தான்.

நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதென்றால், ராகுல்காந்தியின் பேச்சை வரவேற்க வேண்டும். அவரின் சவாலை ஏற்றுத் துணிச்சலுடன் 2019 தேர்தலில் பாஜகவினர் போட்டியிட வேண்டும்.

கடந்த 2014-ம் ஆண்டில் பார்த்த ராகுல் காந்தி போல் இப்போது இல்லை. அவரிடம் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு விமர்சனங்களுக்கு எதிராக, மிக வலிமையான மனவலிமை, புத்திக்கூர்மை உடையவராக ராகுல் வளர்ந்து வந்திருக்கிறார்.

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக ராகுல் இருப்பார். இது கடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினர் மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்தனர். பிரதமர் மோடி கூட தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி ராகுல் காந்தியை விமர்சித்தார். ஆனால், பிரதமர் மோடியை ஒருபோதும் தரக்குறைவாக ராகுல் காந்தி விமர்சிக்கவில்லை, பேசவும் இல்லை.

ராகுல் காந்தி குறிப்பிட்ட தரத்தில், தரமான அரசியல் செய்கிறார் என்பதை அவரை எதிர்ப்பவர்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இப்போதாவது பிரதமர் மோடிக்கு கூட்டணி தர்மம் நினைவுக்கு வரும் என நம்புகிறோம். இது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

காங்கிரஸ் கட்சியுடனும், கூட்டணிக் கட்சிகளுடனும் எந்தவிதமான பேச்சும் இல்லை என்று பாஜக நினைக்கிறது. ஆனால், நாங்கள் கேட்கிறோம், பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் எத்தனை முறை கலந்தாய்வு நடத்தியுள்ளது, அவ்வாறு கலந்தாய்வு செய்து எத்தனை முடிவுகளை நாட்டின் நலனுக்காக எடுத்து இருக்கிறது. இதை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் முதுகில் அதிகாரம் எனும் கத்தியால் குத்துவதையே பாஜக பழக்கமாக வைத்திருக்கிறது. காங்கிரஸில் மூத்த தலைவர்கள் இருக்கும் போது, பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி எப்படி வரலாம் என்று பாஜக கேள்வி எழுப்பினால், பாஜகவில் உள்ள மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோர்தான் இதற்குச் சரியான பதில் அளிக்க முடியும்.

பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் கூட்டணிக் கட்சிகளுடனும், நட்பு ரீதியாக இருக்கும் கட்சிகளுடனும் கலந்து பேசாமல் குடியரசுத் தலைவரை அமர்த்தி இருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பில் தலைவராக மோகன் பகவத் தேர்வு செய்யப்பட்டதுபோல் தேர்வு செய்யப்பட்டார்.

2014-ம் ஆண்டுக்கு முன் மோடி மிகவும் மென்மையானவராக இருந்தார். ஆனால் தேர்தலில் வென்று பிரதமர் நாற்காலியில் அமர்ந்த பின், மக்களுக்கு வேதனைகளையும், பிரச்சினைகளையும் தொடர்ந்து கொடுத்து வருகிறார். கழுதையின் முதுகில் அதிகமான சுமையை ஏற்றியதுபோல் மக்கள் பாஜகவின் ஆட்சியை உணர்கிறார்கள். ஆனால், ஒரே வித்தியாசம் தான், ஒவ்வொரு தேர்தலிலும் கழுதையின் உரிமையாளர்கள்தான் மாறுகிறார்கள்.''

இவ்வாறு சிவசேனா தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x