Published : 10 May 2018 08:03 AM
Last Updated : 10 May 2018 08:03 AM

2016-17 நிதியாண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் பயண விவரங்களை வழங்க வேண்டும்: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சிஐசி உத்தரவு

பிரதமர் மோடி 2016-17-ம் நிதியாண்டில் மேற்கொண்ட வெளிநாட்டு பயண விவரங்களை வழங்குமாறு ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தர விட்டுள்ளது.

பிரதமர் மோடி 2016-ம் ஆண்டு மேற்கொண்ட வெளிநாட்டுப் பயண விவரங்களை வழங்கக் கோரி டெல்லியைச் சேர்ந்த லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அண்மையில் விண்ணப்பத்திருந்தார். அதில், பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட தேதிகள், ஒவ்வொரு பயணத்துக்கும் ஏற்பட்ட செலவு, செலவுத் தொகையை பிரதமர் அலுவலகம் செலுத்திய தேதிகள் உள்ளிட்ட விவரங்கள் கோரப்பட்டிருந்தன.

இதனைப் பரிசீலித்த ஏர் இந்தியா நிறுவனம், அவரது மனுவை நிராகரித்தது. இதுதொடர்பான பதில் கடிதத்தில், “பிரதமர் உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளின் பயண விவரங்கள் 2 அரசாங்க துறைகளுக்கு இடையேயான நம்பகத்தன்மைக்கு உட்பட்டது. எனவே, அந்த விவரங்களை வெளியிட முடியாது” என கூறப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இதே விவரங்களைக் கோரி, இரண்டாவது முறையாக லோகேஷ் பத்ரா விண்ணப்பித்தார். அப்போது, பிரதமரின் வெளிநாட்டு பயணத்துக்கான செலவுகள், விமானத்துக்கான எரிபொருள் செலவுகள் உள்ளிட்ட அனைத்தும் பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனவே, இந்த விவரங்களை நாட்டு நலன் கருதி வெளியிட வேண்டியது அவசியம் என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும், இந்த மனுவையும் ஏர் இந்தியா நிராகரித்தது.

இதையடுத்து, இதுதொடர்பாக மத்திய தகவல் ஆணையத்திடம் பத்ரா முறையிட்டார். இந்நிலையில், இதனைப் பரிசீலித்த மத்திய தகவல் ஆணையம், பத்ரா கோரியுள்ள அனைத்து விவரங்களையும் அவருக்கு வழங்குமாறு நேற்று உத்தரவிட்டது. மேலும், மேற்குறிப்பிட்ட தகவல்களைத் தர மறுத்ததற்கு ஏர் இந்தியா அளித்த விளக்கங்களையும் மத்திய தகவல் ஆணையம் நிராகரித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x