Published : 08 May 2018 01:17 PM
Last Updated : 08 May 2018 01:17 PM

காவிரி வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இன்றும் தாக்கல் செய்யவில்லை: கர்நாடக தேர்தலுக்கு பிறகே விசாரணை

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வரைவு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்றும் தாக்கல் செய்யவில்லை. நீர்வளத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் 12-ம் தேதி நடைபெறும் நிலையில், அதன் பிறகே விசாரணை நடைபெறுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதை 6 வாரங்களுக்குள் அமைக்காமல் காலம் தாழ்த்திய மத்திய அரசு 6 வது வார முடிவில் ‘ஸ்கீம் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு இழுத்தடித்து வருகிறது. .

இந்த வழக்கு மே 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றம் அறிவித்தப்படி மேலாண்மை திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டம் தயாராகிவிட்டது, ஆனால் கையெழுத்திட வேண்டிய மத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவைக்கு அனுப்ப முடியவில்லை என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் கர்நாடகாவில் தேர்தல் நடப்பது குறித்து எங்களுக்கு அக்கறை இல்லை, வரும் 8-ம் தேதிக்குள் மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், உடனடியாக தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும், இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என எச்சரித்தது.

இந்நிலையில், காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படவில்லை. கர்நாடக தேர்தல் காரணமாக வரைவு திட்டம் பற்றி முடிவெடுக்க முடியவில்லை, அதனை தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் கால அவகாசம் தேவை என மத்திய அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, மத்திய நீர்வளத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில் வழக்கு விசாரணை 14-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கர்நாடக அரசு சார்பில் காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘தமிழகத்திற்கு எங்களால் காவிரி நீரை திறந்து விட முடியாது. எங்களது அணைகளில் போதிய அளவிற்கு தண்ணீர் இல்லை. குடிநீருக்கே தண்ணீர் இல்லை. தமிழகத்திற்கு கூடுதலாகவே தண்ணீர் திறந்து விட்டுள்ளோம். போதிய தண்ணீர் இல்லாததால் உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை’’ என தெரிவிக்கப்பட்டது.

கர்நாடகாவின் மனுவை தொடர்ந்து தமிழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், “கர்நாடக அணைகளில் தற்போது 19 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அதில், 4 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும். கால தாதமம் இன்றி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் காரணமாக காவிரி வழக்கு விசாரணை தாமதமடைந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x