Published : 08 May 2018 11:23 AM
Last Updated : 08 May 2018 11:23 AM

தூசுப் புயல் மீண்டும் கோர தாண்டவம்: இருளில் மூழ்கியது டெல்லி - பள்ளிகளுக்கு விடுமுறை

கடந்த சில தினங்களுக்கு முன்பு வட மாநிலங்களை தாக்கிய தூசுப் புயல் நேற்று இரவு டெல்லியில் கோர தாண்டவமாடியது. இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் மின்சாரம் தடைபட்டது. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் பல பகுதிகளில் சில தினங்களுக்கு முன், கடும் சூறைக்காற்றும், இடி, மின்னலுடன் கூடிய மழையும் பெய்தது. வெறும் சூறைக்காற்றோடு இல்லாமல் மணலையும், தூசியையும் அள்ளிக்கொண்டு வந்து மக்கள் வாழுமிடங்களில் ருத்ரதாண்டவமாடியது.

சாலையில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன, சில மரங்கள் தூக்கி வீசப்பட்டன. மின் கம்பங்கள் ஏராளமானவை சாய்ந்ததால், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. வீடுகள் பல இடித்து விழுந்தன. இதனால் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றோர், கார், பஸ், லாரி ஆகியவாகனங்களில் சென்றோர் தொடர்ந்து செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மக்களும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

உத்தரப்பிரதேசத்தில் பிஜ்னோர், பரேலி, சஹாரான்பூர், பிலிபிட், பெரோஷாபாத், சித்ரகூட், முஷாபர்நகர், மதுரா,கான்பூர், சீதாபூர், மிர்சாபூர், சம்பல், பண்டா, கன்னோஜ், ரேபேரில், உன்னாவ் ஆகிய மாவட்டங்கள் இந்த தூசிப்புயலாலும், சூறைக்காற்றாலும், இடிமின்னலுடன் கூடிய மழையாலும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

ராஜஸ்தானில் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட சூறைக்காற்று, தூசுக்காற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட இடியுடன் கூடிய மழை பெய்தது. ஜெய்ப்பூர், ஆல்வார், பாரத்பூர், தோல்பூர், உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. சாலையில் ஆங்காங்கே மரங்கள் பெயர்ந்து விழுந்துள்ளன, மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன.

பல மாநிலங்களையும் தாக்கிய தூசுப் புயலுக்கு 130 பேர் பலியாகினர். மீ்ண்டும் புயல் தாக்கும் என வானிலை மையம் எச்சரித்து இருந்தது.

இந்நிலையில், டெல்லி, சண்டிகரையும் இடி, மின்னலுடன் பலத்த புயல் நேற்று இரவு தாக்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குருகிராம், நொய்டா உள்ளிட்ட இடங்களிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின்சாரம் தடைபட்டதால் டெல்லி இருளில் மூழ்கியது. இதனால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களில் மீண்டம் தூசுப் புயல் தாக்கும் ஆபத்து உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x