Published : 30 Apr 2018 01:10 PM
Last Updated : 30 Apr 2018 01:10 PM

நீண்டகாலம் பதவி வகிக்கும் சிக்கிம் முதல்வர்: ஜோதி பாசு சாதனையை முறியடித்தார் சாம்லிங்

இந்தியாவில் மாநில முதல்வராக நீண்டகாலம் பதவி வகித்தவர் என்ற மேற்குவங்க முதல்வர் ஜோதி பாசுவின் சாதனையை சிக்கம் முதல்வர் பவன் குமார் சாம்லிங் முறிடியத்துள்ளார்.

சிக்கிம் முதல்வராக பதவி வகித்து வருபவர் பவன் குமார் சாம்லிங் (வயது 63). தனது 32 வயதில் அரசியலில் அடியெடுத்து வைத்த சாம்லிங் தொடக்கம் முதலே மக்கள் விரும்பும் தலைவராக வலம் வருகிறார். அம்மாநில முதல்வராக 1989-ம் ஆண்டு நர் பகதூர் பண்டாரி பதவி வகித்தபோது அவரது அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தார் சாம்லிங்.

பின்னர் 1993ம் ஆண்டு சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி் தொடங்கினார். 1994ம் ஆண்டு தேர்தலில் பெரும் வெற்றி பெற்று சிக்கிம் முதல்வர் பதவியில் அமர்ந்தார். அன்று முதல் சிக்கிம் மக்களின் மனம் கவர்ந்த தலைவராகவும், மக்கள் முதல்வராகவும் விளங்கி வருகிறார். தொடர்ந்து ஐந்து முறை தேர்தலில் வென்று முதல்வர் பதவியில் நீடித்து வருகிறார்.

கவிஞரான சாம்லிங் நேபாள மொழியில் பல கவிதைகளை இயற்றியுள்ளார். பாடலாசிரியராகவும் விளங்கி வருகிறார். அவர் நேபாள மொழியில் எழுதிய பல பாடல்கள் மிகவும் பிரபலம். இதுமட்டுமின்றி இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரது முயற்சியால் இந்தியாவிலேயே 100 சதவீதம் இயற்கை விவசாயம் நடைபெறும் மாநிலமாக சிக்கிம் உருவெடுத்துள்ளது.

இயற்கை விவசாயம் செய்வதற்கு தேவைப்படும் இடு பொருட்கள் அனைத்தையும் மாநில அரசே உற்பத்தி செய்து வழங்குகிறது. இதுமட்டுமின்றி இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட தானியங்கள், காய்கறிகள், போன்றவை உள்ளூர் மக்களுக்கு பயன் பெறும் வகையில் விற்பனை செய்யவும், அதேசமயம் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மக்கள் நலன் சார்ந்த அவரது நடவடிக்கைகளால் தொடர்ந்து முதல்வர் பதவியில் அமர்ந்து வருவதுடன், எந்த ஒரு எதிர்கட்சியும் அவரை அசைக்க முடியவில்லை. கடந்த 2014ம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலிலும் கூட மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளை கைபற்றி மீண்டும் ஆட்சி அமைத்தார்.

இதனிடையே இந்தியாவில் நீண்டகாலம் முதல்வர் பதவி வகித்து வருபவர் என்ற புதிய சாதனையை சாம்லிங் ஏப்ரல் 29ம் தேதி படைத்துள்ளார்.

மேற்குவங்க மாநில முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜோதி பாசு 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக பதவியில் அமர்ந்து சாதனை படைத்தார். 1977ம் ஆண்டு மேற்குவங்க முதல்வராக பதவியில் அமர்ந்த ஜோதி பாசு, 2000மாவது ஆண்டில் பதவியை, புத்ததேவ் பட்டாச்சார்யாவிடம் ஒப்படைத்து விட்டு விலகினார்.

அவரது சாதனையே தொடர்ச்சியாக நீண்டகாலம் பதவி வகித்த முதல்வர் என்ற பெருமையை கொண்டதாக இருந்தது. சிக்கம் முதல்வர் சாம்லிங் இந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். 1994ம் ஆண்டு சிக்கிம் முதல்வர் பதவியில் அமர்ந்த சாம்லிங், ஏப்ரல் 29 -ம் தேதியுடன், 8,539 நாட்கள் தொடர்ச்சியாக முதல்வர் பதவி வகித்துள்ளார்.

இது ஜோதி பாசுவின் சாதனை நாட்களாகும். இதன் மூலம் இந்திய வரலாற்றில் அதிக நாட்கள் முதல்வர் பதவி வகித்தவர் என்ற பெருமையை சாம்லிங் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x