Last Updated : 26 Apr, 2018 10:19 PM

 

Published : 26 Apr 2018 10:19 PM
Last Updated : 26 Apr 2018 10:19 PM

சுதந்திர வாழ்க்கைக்கு ஆசை: பெற்றோர், குழந்தையை விஷம் வைத்து கொலை செய்த இரக்கமற்ற இளம்பெண்

உல்லாசமாகவும், சுதந்திரமாகவும் வாழ ஆசைப்பட்டு பெற்ற குழந்தையையும், தாய், தந்தையையும் இளம்பெண் விஷம் வைத்துக் கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து கண்ணூர் மாவட்ட போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

''கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், பினராயி நகரைச் சேர்ந்தவர் சவுமியா (வயது 28). இவர் தன்னுடைய தாய் கமலா (65), தந்தை குன்னிகண்ணன் (76) ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். சவுமியாவுக்கு ஐஸ்வர்யா என்ற குழந்தை இருந்தது. சவுமியாவின் கணவர் அவரைவிட்டுப் பிரிந்துவிட்டதால், தாய்,தந்தையுடன் வசிந்து வந்தார்.

இந்நிலையில், 50 நாட்கள் இடைவெளியில் சவுமியாவின் தாய், தந்தை, குழந்தை ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து உடல் நலமில்லாமல் இறந்தனர். ஆனால், சவுமியா மட்டும் அது குறித்து கவலைப்படுவதுபோல் நடித்துக்கொண்டிருப்பதை உறவினர்கள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, சவுமியாவின் நடவடிக்கைகள் குறித்து அவரின் உறவினர்கள் போலீஸில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் சவுமியாவை அழைத்துவந்து ஏறக்குறைய 12 மணிநேரம் விசாரணை நடத்தினோம். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

தாய், தந்தையின் கட்டுப்பாடுகளுடனும், குழந்தையை பராமரிப்பதிலும் சவுமியா விருப்பமில்லாமல் இருந்துள்ளார். இவர்களை விட்டு எங்கேயாவது சென்று சுதந்திரமாகவும், உல்லாசமாகவும் வாழ அவருக்கு ஆசை இருந்தது. ஆனால், இவர்களை விட்டுப் பிரிந்துசெல்ல விடாமாட்டார்கள் என்பதால், மூன்று பேரையும் கொலை செய்ய சவுமியா முடிவு செய்தார்.

இதற்காக கடந்த ஜனவரி 21-ம் தேதி தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு எலி மருந்தை சாப்பாட்டில் கலந்து கொடுத்துள்ளார். அதைச் சாப்பிட்ட ஐஸ்வர்யா மயக்கமடைந்து, வாந்தியெடுத்துள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தபோதும், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

அடுத்த சில மாதங்களில் அதாவது மார்ச் மாதத்தில் இதேபோல தனது தாய் கமலாவுக்கும் சாப்பாட்டில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்தார் சவுமியா. அவரும் சாப்பிட்டு வாந்தி எடுத்தார். அவரையும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் இறந்தார்.

அடுத்த சில நாட்களில் சவுமியாவின் தந்தை வி.வி. குன்னிகண்ணனும் இதேபோல இறந்தார். அவரையும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்த சிகிச்சை அளித்தபோது பலன் அளிக்காமல் மரணமடைந்தார். இவர்கள் மூன்று பேரும் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்கள் என்று கூறி உறவினர்களை நம்பவைத்துள்ளார். விசாரணையின் இறுதியில இவர்கள் மூன்று பேருக்கும் விஷம் வைத்துக் கொலை செய்ததை சவுமியா ஒப்புக்கொண்டார்.''

இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையே சவுமியாவின் சகோதரி சந்தியா மலையாள செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ''என்னுடைய தந்தை உடல்நலமில்லாமல் தலச்சேரி மருத்துவமனையில் இருந்தபோது, கோழிக்கோடு மருத்துவமனைக்கு மாற்ற என் சகோதரி சவுமியாவிடம் கேட்டேன். ஆனால், அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

மேலும், அவ்வப்போது எனது தந்தையின் உடல்நலன் தொடர்பான வீடியோக்களை எடுத்து எனக்கு அனுப்பியதால், நான் நம்பிவிட்டேன். என் தந்தை இறந்தபின் அவரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யக்கோரியபோது, அதற்கும் என்சகோதரி சவுமியா மறுத்துவிட்டார். இதனால், எங்களுக்கு சந்தேகம் அப்போதே கூடுதலாக இருந்தது.

என் தாய் கமலா இறந்தபோதும் இதேபோல உடற்கூறு ஆய்வு நடத்தக்கோரி, என் உறவினர்கள் சந்தேகம் அடைந்து என்னிடம் தெரிவித்தனர். ஆனால், அவர்களிடம் சண்டையிட்ட என் சகோதரி அதற்கு மறுத்துவிட்டார்'' எனத் தெரிவித்தார்.

இதையடுத்து,சவுமியாவைக் கைது செய்த போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x