Last Updated : 26 Apr, 2018 07:18 PM

 

Published : 26 Apr 2018 07:18 PM
Last Updated : 26 Apr 2018 07:18 PM

ஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பது குறித்து மோடி பேசுகிறார்: ராகுல் காந்தி காட்டம்

ஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே, ஊழலை ஒழிப்பதைப் பற்றி பிரதமர் மோடி பேசுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாகப் பேசியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரகன்னட பகுதியில் உள்ள அங்கோலா நகரில் இன்று 7-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''கர்நாடகத்துக்கு வந்த மோடி, ஊழலையும், அதை ஒழிப்பதையும் பற்றி பேசினார். மோடிக்கு, வைர வியாபாரி நிரவ் மோடி நன்றாக அறிமுகமானவர். வங்கியில் கடன்பெற்று ரூ.30 ஆயிரம் கோடியோடு நாட்டைவிட்டு ஓடிவிட்டார். அவரைப்பற்றி ஒருவாரத்தை கூட மோடி பேசவில்லை.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி மேடையில் ஊழல் குறித்து பேசும்போது, அருகே எடியூரப்பாவும், அவர் அருகே மற்ற 4 பாஜக தலைவர்களும் நின்று இருந்தார்கள். இவர்கள் அனைவரும் ஊழல் செய்து சிறைக்குச் சென்றவர்கள். ஊழல்வாதிகளை அருகே வைத்துக்கொண்டு, ஊழலை ஒழிப்பது குறித்து மோடி பேசுகிறார்.

சித்தராமையா  தலைமையிலான காங்கிரஸ் அரசு 10 சதவீதம் கமிஷன் அரசு என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறார். நான் கேட்கிறேன் பாஜக ரெட்டி சகோதரர் உள்ளிட்ட 8 பேருக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கிறது. இவர்கள் அனைவரும் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருந்து வந்தவர்கள். இதுதான் உங்கள் கட்சியின் உண்மையான நிலைப்பாடா?

எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, ரெட்டி சகோதரர்கள் கர்நாடக மாநிலத்தையே கொள்ளையடித்தார்கள். எங்களின் காங்கிரஸ் அரசு அவர்களை நீதியின் முன் நிறுத்தியது. இப்போது இந்த 8 பேரையும் சிறையில் இருந்து வெளியே எடுத்து, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கிறார் மோடி. இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும், கர்நாடகத்தின் பசவனரையும் அவமானப்படுத்தும் செயலாகும்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் என்பது ஆர்எஸ்எஸ், பாஜக சித்தாந்தத்துக்கும், காங்கிரஸின் காந்திய சித்தாந்தத்துக்கும் இடையிலான போட்டியாகும். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தால், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் நிச்சயம் செயல்படும். அரசின் நிதியுதவிகள் சாமானிய மக்களைச் சென்றடையும்.

பாஜகவுக்கு வாக்களித்தால் மக்களின் பணம் குறிப்பிட்ட 10 தொழிலதிபர்களின் பாக்கெட்டுக்குச் சென்றடையும். கர்நாடகத்தில் உள்ள ஏழைகள், விவசாயிகள், விளிம்பு நிலையில் உள்ள மக்கள் அனைவரும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற வேண்டும் என காங்கிரஸ் நினைக்கிறது. ஆனால், பாஜகவினரோ 10 தொழிலதிபர்கள் பயன் அடைந்தால்போதும் என நினைக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கொடுக்கமாட்டேன் என நினைக்கும் மோடி ஏன் ஆண்டுதோறும் பெரிய தொழிலதிபர்களின் லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்கிறார். இந்த ஆண்டு ரூ.2.5 லட்சம் கோடியை 15 மிகப்பெரிய தொழிலதிபர்களுக்கு மத்திய பாஜக அரசு தள்ளுபடி செய்துள்ளது.''

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x