Last Updated : 26 Apr, 2018 06:38 PM

 

Published : 26 Apr 2018 06:38 PM
Last Updated : 26 Apr 2018 06:38 PM

எச்1-பி விசா கிடுக்கிப்பிடி: ‘மோடி உங்கள் கட்டிப்பிடி கொள்கை போதாது’- ராகுல் காந்தி கிண்டல்

இந்தியர்களுக்கு எச்1-பி விசா வழங்குவதில் பல்வேறு கிடுக்கிப்பிடிகளை அமெரிக்க அரசு நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், மோடியின் கட்டிப்பிடி கொள்கை எடுபடாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல்  செய்துள்ளார்.

அமெரிக்காவில் நிரந்தரமாக தங்காமல், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு தங்கி பணியாற்றுவோருக்கு வழங்கப்படுவது எச்1-பி விசா. இந்த எச்1-பி விசாவுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கி இருக்கிறது. இதில் பெரும்பாலும் இந்தியா, சீனாவைச் சேர்ந்த மென்பொறியாளர்களை அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கின்றன.

இந்நிலையில் இந்தியர்கள், சீனர்கள் அதிகமான அளவு அமெரிக்காவுக்கு வேலைக்கு வருவதால், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது என அதிபர் டிரம்ப் அச்சம் தெரிவித்தார்.

இதையடுத்து, மறைமுகமாக இந்த எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், எச்1-பி விசா வழங்குவதில் கடும் கிடுக்கிப்பிடிகளை கொண்டு வந்தார். அதில் விண்ணப்பத்தில் சிறு தவறு இருந்தாலும், நிராகரிக்கப்படும் என்பது போல், விண்ணப்பம் செய்பவரின் மனைவி அமெரிக்காவில் வந்து எந்த நிறுவனத்திலும் வேலை செய்யக்கூடாது என்பதாகும்.

இந்த விதிமுறை மனைவியை உடன் அழைத்துச் செல்லும் இந்தியர்களுக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ட்விட்டரில் பிரதமர் மோடியை கிண்டல் செய்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''அமெரிக்காவின் எச்1-பி விசா வழங்கும் புதிய விதிகள் அமெரிக்கா சென்று பணியாற்றும் இந்தியர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது. பல்வேறு கிடுக்கிப்பிடிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தியாவுக்கும் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது.

மோடி தனது கட்டிப்பிடி கொள்கையின் மூலம் சிலவற்றை வாங்க முடியும் என நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், விசா என்பது அவர்வர்களின் சொந்த முயற்சியால் பெறுவதாகும். இதுதான் பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கையா. இந்தக் கொள்கைக்கு அதிபர் டிரம்ப் முன்னுரை எழுதியிருக்கிறாரா?''  என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x