Last Updated : 26 Apr, 2018 05:29 PM

 

Published : 26 Apr 2018 05:29 PM
Last Updated : 26 Apr 2018 05:29 PM

உ.பி.யில் இஸ்லாத்துக்கு மாறிய இளைஞர் மறுநாளே தாய் மதம் திரும்பினார்

உ.பி.யின் ஷாம்லியைச் சேர்ந்த பவன்குமார் (25) இஸ்லாத்திற்கு மதம் மாறி மறுநாளே தாய் மதம் திரும்பியுள்ளார். தாம் சிறையில் அடைக்கப்பட்டுவிடுவோம் எனப் பயந்து இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க மறுத்துள்ளார்.

கடந்த 2013-ம் வருடம் நடந்த மதக்கலவரத்தால் உ.பி.யில் முக்கியத்துவம் பெற்ற மாவட்டம் முசாபர் நகர். இதன் அருகிலுள்ள ஷாம்லியிலும் அந்த மதக் கலவரப் பாதிப்புகள் இருந்தன. இதனால், அவ்விரு மாவட்டங்களிலும் அவ்வப்போது பதட்டம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், ஷாம்லி நகர காவல் நிலையப் பகுதிவாசியான பவன்குமார், கடந்த திங்கள்கிழமை இரவு மூன்று மவுலானாக்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். அவருக்கு முகம்மது ஆலம் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான பவன்குமாரின் மதமாற்றம் அப்பகுதியினர் இடையே பரவியது.

இதைக் கேள்விப்பட்ட விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பினர் மறுநாள் செவ்வாய்க்கிழமை பவன்குமாரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். பிறகு அவரைக் கட்டாயப்படுத்தி மீண்டும் இந்து மதத்திற்கு திரும்ப வைத்ததாகப் புகார் எழுந்துள்ளது. ஆனால், தாம் சிறையில் தள்ளப்பட்டு விடுவோம் என அஞ்சிய பவன்குமார் அதை காவல் நிலையத்தில் புகாராக அளிக்க மறுத்து விட்டார்.

இது குறித்து ’தி இந்து’விடம் பஜ்ரங்தளம் அமைப்பின் மீரட் பகுதி தலைவரான விவேக் பிரேமி கூறும்போது, ‘அழகான முஸ்லிம் பெண்ணை மணமுடிப்பதுடன் வேலையும் வாங்கித் தருவதாக ஆசைகாட்டி இந்த மதமாற்றம் சட்டவிரோதமாக நடைபெற்றுள்ளது. இதுபோன்ற மதமாற்றங்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என பவன்குமாரை நேரில் சந்தித்து புரிய வைத்தோம். அதை ஏற்று அவர் தானாக தாய் மதம் திரும்பி விட்டார்.’ எனத் தெரிவித்தார்.

உ.பி.யின் மேற்குப் பகுதியில் வாழும் இளைஞர்களில் பலருக்கு தாம் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் எவரும் வேலையில் சேர்த்துக்கொள்ள முன்வருவதில்லை எனப் புகார் உள்ளது. இதனால், அவர்கள் முஸ்லிம் மவுலானாக்களால் பேசி மத மாற்றம் செய்வது அவ்வப்போது நடைபெறுவதாகவும், அதில் தானும் மனமுவந்து அதைச் செய்ததாகவும் பவன்குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்தச் செய்தி இன்று உ.பி. தொலைக்காட்சி ஊடகங்களிலும் வெளியானதை அடுத்து, ஷாம்லி மாவட்டக் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்லோக் குமார் உத்தரவின் பேரில் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x