Last Updated : 26 Apr, 2018 04:16 PM

 

Published : 26 Apr 2018 04:16 PM
Last Updated : 26 Apr 2018 04:16 PM

முன் பகை காரணமா? உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப் நியமனத்துக்கு மறுப்பு: வலுக்கும் மத்திய அரசு - நீதித்துறை மோதல்

 

நீதிபதியாக கே.எம். ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலிஜியம் செய்த பரிந்துரையை ஏற்க மறுத்த மத்திய அரசு அதை மறுபரிசீலனை செய்யக் கோரி திருப்பி அனுப்பி உள்ளது. இதனால், நீதித்துறைக்கும், மத்தியஅரசுக்கும் இடையிலான மோதல் வலுத்துள்ளது.

அதேசமயம், வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதியாக இந்து மல்கோத்ராவின் பெயரை ஏற்றுக்கொண்ட மத்தியஅரசு அவரை நீதிபதியாகப் பொறுப்பேற்க அனுமதி அளித்துள்ளது. அவரும் நாளை குடியரசுத் தலைவர் மாளிகையில் நீதிபதியாக பதவிப்பிரமாணம் எடுக்கிறார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பு நீதிபதிகளைத் தேர்வு செய்து அந்தப் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்புகிறது. மத்திய அரசு அதைப் பரிசீலித்து அதற்கு ஒப்புதல் அளிக்கிறது. இதுதான் காலங்காலமாக நடந்து வரும் முறையாகும். இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி 10-ம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பு, 2 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

அதில் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, மற்றொருவர் உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப் ஆகிய இருவராகும். இதில் இந்து மல்ஹோத்ராவின் பெயரை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு நீதிபதி ஜோசப் பெயரை ஏற்க மறுத்து, அவரின் பெயரை மறுபரிசீலனை செய்யக் கோரி கொலிஜியத்துக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

அதற்குக் காரணமாக, நீதிபதி ஜோசப்புக்கு முன் சீனியாரிட்டி அடிப்படையில் 11 நீதிபதிகள் இருக்கிறார்கள் என்பதால், தற்போது ஜோசப்பின் பெயருக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்பதால் மீண்டும் ஆய்வு செய்யவும் என்று கொலிஜியத்துக்கு மத்திய அரசு பதில் அனுப்பி உள்ளது.

இதனால், நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு அளிப்பதில் உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. அதிகமான பெயரை பரிந்துரை செய்து அனுப்பினால், அதில் பலரை மத்திய அரசு நிராகரிக்கும் என்பதால், 2 பேரை பரிந்துரைந்தோம். அதிலும் ஒருவரை நிராகரிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கிடையே இந்து மல்ஹோத்ரா நியமனத்தையும் நிறுத்திவைக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் சார்பில் இன்று தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜோசப் நியமன மறுப்புக் காரணம் என்ன?

கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் தலைமை நீதிபதியாக ஜோசப் பணியாற்றி வருகிறார். அந்த மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் ஹரிஸ்ராவத் தலைமையிலான அரசில் குழப்பம் விளைவித்து, எம்எல்ஏக்களை உடைத்து ஆட்சியில் பாஜகவினர் குழப்பத்தை விளைவித்தது.

இதனால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டு அங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், அது தொடர்பான வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து, மீண்டும் காங்கிரஸ் முதல்வர் ஹரிஸ்ராவத் ஆட்சியைக் கொண்டுவந்தார். இது அப்போது பாஜகவுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது.

அதன்பின் நீதிபதி ஜோசப்பை ஆந்திர மாநிலத்துக்கு மாற்றக் கோரியும் கொலிஜியம் பரிந்துரை செய்தும் அவரை இடமாற்றம் செய்து அவரை உச்ச நீதிமன்ற நிதிபதியாக நியமிக்க உத்தரவிட்டது. ஆனால், அதையும் மத்திய அரசு தடுத்துவிட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்த காரணத்தால், தற்போது ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்த மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது.

இதற்கு முன்...

இது மட்டுமல்லாமல் இதற்கு முன்பு இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது, 2014-ம் ஆண்டில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் கொலிஜியம் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தது. ஆனால் அவரின் பெயரையும் மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

இதற்கு என்ன காரணமென்றால், காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் நெருங்கியவராக இருந்த கோபால் சுப்பிரமணியம்,கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவர வழக்கில் கடுமையான வாதங்களை எடுத்துவைத்து வாதாடினார், மிகவும் தீவிரமாக செயல்பட்டார். அந்தக் காரணத்தால் அப்போது அவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x