Last Updated : 26 Apr, 2018 02:41 PM

 

Published : 26 Apr 2018 02:41 PM
Last Updated : 26 Apr 2018 02:41 PM

நமக்கு வளர்ச்சிதான் முக்கியம்; காங்கிரஸ் மக்களுக்கு ‘லாலிபாப்’ கொடுக்கிறது: பிரதமர் மோடி சாடல்

 கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் நாம் வளர்ச்சியை மட்டும் குறிக்கோளாக வைத்துப் பணியாற்ற வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சியோ சாதிக்குழுக்களுக்கு லாலிபாப் அளித்து அவர்களைத் திசை திருப்புகிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் மே 12-ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 15-ம் தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரப் பயணத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரிடமும் பிரதமர் மோடி தன்னுடைய ‘நமோ ஆப்ஸ்’ மூலம் வீடியோ கான்பிரன்ஸிங் முறையில் இன்று பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

''கர்நாடக தேர்தலில் பாஜக 3 விதமான திட்டங்களுடன் களமிறங்குகிறது. ‘வளர்ச்சி, வேகமான வளர்ச்சி, அனைத்துத் தரப்பிலும் வளர்ச்சி’ ஆகிய 3 மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். நம்முடைய இலக்கு,நோக்கம், திட்டம் அனைத்தும் வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி மட்டுமே ஆகும்.

ஆனால், நாம் வளர்ச்சிக்காக உழைக்கிறோம் ஆனால், காங்கிரஸ் கட்சியோ சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது. ஒரு சில சாதி அமைப்புகளுக்கு (லிங்காயத்) ‘லாலிபாப்’(தனிமதம் அங்கீகாரம்) அளித்து அவர்களைத் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் திசை திருப்புகிறது.

கர்நாடக தேர்தலில் ஒருபோதும் தொங்கு சட்டப்பேரவை அமையாது. அவ்வாறு ஒருசிலர் தவறான பிரச்சாரங்களை பரப்பி வருகிறார்கள். கர்நாடகத்தில் முழுமையான வளர்ச்சித் திட்டங்களை நாம் செயல்படுத்துவதற்கு நமக்கு முழுமையான பெரும்பான்மை கொண்ட அரசு இருக்க வேண்டும். அதற்காக நம்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் உழைக்க வேண்டும்.

கர்நாடக மக்கள் மாநிலத்தில் மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள், ஆட்சி மாற்றத்துக்கு முடிவு செய்துவிட்டார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு நல்லபிள்ளையாக நடப்பவர்கள், நண்பர்கள் சிலர் பொய்களைப் பரப்பி வருகிறார்கள்.

இதேபோன்ற பொய்கள் தான் 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் பரப்பிவிட்டனர். ஆனால், தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராதவிதமாக அமைந்தது. ஆதலால், இந்தப் பிரச்சாரத்தால் ஒன்றும் நடக்கப்போவதில்லை, மக்களிடம் பிரிவினையையும், அச்சத்தையும் ஊட்ட இதுபோன்ற சதித்திட்டம் தீட்டப்படுகிறது.

30 ஆண்டுகளுக்குப் பின்  மத்தியில் நமக்கு முழுமையான பெரும்பான்மை கிடைத்து இருக்கிறது. இந்த நேரத்தில் நாம் வளர்ச்சிக்குரிய முக்கியச் சட்டங்களை நிறைவேற்றி காலதாமதத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, உலகளவில் நாட்டுக்கு நற்பெயரை உண்டாக்க முடியும்.

கர்நாடக மக்கள் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட விரும்புகிறார்கள். ஆனால், அதை ஒரு சிலர் சதித்திட்டம் செய்து தடுக்கிறார்கள். 2022-ம் ஆண்டு புதிய இந்தியாவுக்காக கர்நாடக மக்கள் பங்களிப்பு செய்ய விரும்புகிறார்கள்.

ஆனால், ஒரு சில கட்சிகளோ (காங்கிரஸ்) பொய்களைப் பரப்பி, பணத்துக்காகவும், அரசியல் அதிகாரத்துக்காகவும், சாதிப் பாகுபாடுகளை உண்டாக்கிச் செயல்படுகின்றன.

கர்நாடக மாநிலத்தில் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலைப்பணிகள் மத்திய அரசால் செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் கர்நாடக மாநிலத்தில் 1,750 கி.மீ.க்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் பாதி அளவுதான் காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்டது.

மத்திய அரசு வளர்ச்சிப்பணிகளை சிறப்பாகச் செய்துவிடக்கூடாது என்பதற்காக இங்கிருக்கும் முதல்வர் சித்தராமையா ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்துவருகிறார்''.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x