Last Updated : 21 Apr, 2018 01:23 PM

 

Published : 21 Apr 2018 01:23 PM
Last Updated : 21 Apr 2018 01:23 PM

‘‘தலைநகரை மாற்றிவிடுங்கள்: மவுன பாபா நாட்டின் பிரச்சினைகளை வெளிநாடுகளில்தான் பேசுகிறார்’’ - மோடியை விளாசிய சிவசேனா

 நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினைகள் அனைத்தையும் மவுன பாபா பிரதமர் மோடி தனது வெளிநாட்டு பயணத்தின் போதுதான் பேசுகிறார், ஆதலால், நாட்டின் தலைநகரை லண்டன் அல்லது டோக்கியோவுக்கு மாற்றிவிடுங்கள் என்று சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வில் தலையங்கத்தில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்தும், உள்நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அவர் பேசாமல் மவுனமாக இருப்பது குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

“மவுன பாபா” பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு 5 நாட்கள் பயணம் சென்றார். காஷ்மீர் சிறுமி பலாத்காரம், உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏவால் மைனர் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட போன்ற பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன.

ஆனால், இதைப்பற்றி உள்நாட்டில் கருத்து தெரிவிக்காமல் பிரதமர் மோடி வெளிநாடுகளில் சென்று கருத்து தெரிவித்து வருகிறார். இதனால், யாருக்கு என்ன பயன், உள்நாட்டுப் பிரச்சினைகளை வெளிநாடுகளில் பேசுவதால், என்ன விளைந்துவிடும்.

வேண்டுமென்றால், மோடிக்காகத் தலைநகரை டோக்கியோ அல்லது லண்டன் நகருக்கோ, பாரீஸ் நகருக்கோ, நியூயார்க், அல்லது ஜெர்மனுக்கோ மாற்றிவிடலாம். அது சாத்தியமில்லாவிட்டால் கூட அவரின் அலுவலகத்தைக்கூட மாற்றிவிடலாம்.

அதுமட்டுமல்லாமல், இங்கிலாந்தில் இருந்து வரும் போது பிரதமர் மோடி வெறும்கைகளோடு திரும்பிவந்து இருக்கிறார். ரூ.9 ஆயிரம் கோடி வங்கிப்பணத்தை மோசடி செய்த விஜய் மல்லையா, வங்கிப்பணத்தை மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி ஆகியோர் லண்டனில்தான் இருக்கிறார்கள். அவர்களைப் பாதுகாப்பாக தங்கவைத்துவிட்டு, அவர்கள் இருவரையும் நாடு கடத்தும் திட்டம் குறித்தும் எந்த முடிவும் எடுக்காமல் வெறும் கையோடு மோடி வந்துள்ளார்.

உள்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி பேசாமல் மவுனமாக இருக்கிறார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம்சாட்டியுள்ளார். அது தொடர்பாக மன்மோகன் சிங் சமீபத்தில் மோடிக்கு அறிவுரை கூறினார். மோடி அடிக்கடி பேசுங்கள், மவுனமாக இருக்காதீர்கள், குறிப்பிட்ட விஷயங்களின் போது பேசி உங்கள் கருத்தை தெரிவியுங்கள் என்றார்.

இதே அறிவுரையைப் பிரதமர் மோடி, மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் போது கூறினார். இப்போது மன்மோகன், மோடிக்குக் கூறிவிட்டார். ஆதலால், பிரதமர் மோடி, மன்மோகன் சிங் அறிவுரைப்படி நடந்து, அதிகமாகப் பேச வேண்டும். இது மன்மோகன்சிங் விருப்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடும் பிரதமர் மோடி முக்கியமான தருணங்களில் கருத்துச் சொல்லவேண்டும், பேச வேண்டும் என எதிர்பார்க்கிறது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பாதி அளவு பேசினார். ஆனால் இப்போது இருக்கும் பிரதமர் மோடி அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் மவுனபாபாவாக இருக்கிறார். ஆனால், வெளிநாடுகளில் சென்று உள்நாட்டு பிரச்சினைகளைப் பேசுகிறார்.

பிரதமர் மோடி இந்தியாவில் நடந்த பலாத்காரங்கள் குறித்து லண்டனில் பேசுகிறார். இது ஒருவிதமான உணர்ச்சிகரமான புத்தியுள்ளவர்களின் மனநிலையைக் காட்டுகிறது.

இந்தியாவில் நடக்கும் பலாத்கார சம்பவங்களை வெளிநாடுகளில் பிரதமர் மோடி பேசுவது சரியானதா?. இந்தியாவுக்கு அவப்பெயரைத் பெற்றுத்தரும் சம்பவங்களை ஏன் மோடி வெளிநாடுகளில் பேசுகிறார், உள்நாட்டில் அவரின் கருத்துக்களை தெரிவிக்கலாமே.

இதேபோன்றுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை உள்நாட்டில் அறிவித்துவிட்டு, பிரதமர்மோடி ஜப்பானுக்குப் பறந்துவிட்டார். அங்கிருக்கும் இந்தியர்களிடம் கறுப்புபணம், ஊழல் குறித்து பேசினார்.

ஆனால், இதுகுறித்துப் பேச மோடியின் ஆதரவாளர்கள் முன்வரமாட்டார்கள். ஆனால், மன்மோகன்சிங் இதுகுறித்து பேசத் தொடங்கிவிட்டார், ஆனால், மோடி மவுனமாகிவிட்டார். பாஜகவுக்கு எதிராக விதி எடுத்திருக்கும் பழிவாங்கும் நடவடிக்கை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x