Last Updated : 17 Apr, 2018 04:13 PM

 

Published : 17 Apr 2018 04:13 PM
Last Updated : 17 Apr 2018 04:13 PM

வங்கி மோசடி: ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு நோட்டீஸ்: 17-ம் தேதி ஆஜராக நாடாளுமன்றக் குழு உத்தரவு

வங்கி மோசடி தொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.15 ஆயிரம் கோடி கடன் பெற்ற வைர வியாபாரி நிரவ் மோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடினார்.

இதுபோல் கீதாஞ்சலி ஜுவல்லர்ஸ் உரிமையாளர் மெகுல் சோக்சி உள்ளிட்ட பலர் ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டில் பதுங்கி இருக்கிறார்கள்.

வங்கி மோசடி, நிரவ்மோடி மோசடி விவகாரத்தைக் கையில் எடுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முடக்கின. ஆனால், பிரதமர் மோடி கடைசி வரை விளக்கம் அளிக்கவில்லை இது குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், அரசு வங்கிகளைக் கட்டுப்படுத்த போதுமான அளவு அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு இல்லை என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த வங்கி மோசடிகள், நிரவ் மோடி, முகுல் சோக்சி ஆகியோரின் மோசடிகள் குறித்து விசாரணை நடத்த ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 17-ம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு முன், ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நிலைக்குழு அளித்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்பமொய்லி தலைமையிலான நிலைக்குழுவில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.

நிதிச்சேவை செயலாளர் ராஜீவ் குமாரிடம் இன்று நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்தியது. அப்போது, வங்கி மோசடி தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

இது குறித்து நிலைக்குழுவில் இடம் பெற்றுள்ள எம்.பி.ஒருவர் கூறுகையில், அரசு வங்கிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு இல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் பேசியிருக்கிறார். வங்கிகளைக் கட்டுப்படுத்துவது ரிசர்வ் வங்கியின் முக்கிய கடமைகளில் ஒன்று, ஆனால், கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை என்று பேசியுள்ளார்.

நிலைக்குழுவிடம் விசாரணைக்கு வரும் உர்ஜித்படேலிடம் வங்கி மோசடிகள், தனியார், அரசு வங்கிகளில் நடந்துள்ள மோசடிகள் குறித்து கேள்விகள் கேட்கப்படும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் நடந்துள்ள மோசடிகள் தொடர்பாக கேள்விகள் முன்வைக்கப்படும். அவருக்குப் பதில் அளிக்க 3 வாரம் அவகாசம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x