Last Updated : 17 Apr, 2018 03:59 PM

 

Published : 17 Apr 2018 03:59 PM
Last Updated : 17 Apr 2018 03:59 PM

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியலில் ரெட்டி சகோதரர் உட்பட சர்ச்சை விஐபிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு

 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் 2-ம் கட்ட 82 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஊழல் புகாரில் சிக்கிய சுரங்கம், கிரனைட் அதிபரான ரெட்டி சகோதரர், பலாத்காரப் புகார் ஆகியவற்றில் சிக்கிய விஐபிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மே 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவும், 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. 224 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ், பாஜக கட்சிகள் அறிவித்து வருகின்றன. இதில் பாஜக முதல் கட்டமாக 72 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட நிலையில், 2-ம் கட்டமாக 82 பேர் கொண்ட பட்டியலை நேற்று வெளியிட்டது.

இந்த வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் கட்டா சுப்பிரமண்ய நாயுடு, எஸ்என் கிருஷ்ணய்யா ஷெட்டி, எச் ஹலப்பா, எம்.பி. ரேணுகாச்சார்யா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதில் சுப்பிரமண்ய நாயுடு மீது ஊழல் வழக்குகளும், ஹலப்பா மீது பலாத்கார வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. அதேபோல ரேணுகாச்சார்யா, ஷெட்டி ஆகியோர் பெண்களுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய கர்நாடகாவில் சுரங்கத் தொழிலில் பிரபலமாக இருக்கும் ரெட்டி சகோதரர்களில் கடைசி சகோதரரான ஜி.சோமசேகர ரெட்டிக்கு பெல்லாரி தொகுதியில் போட்டியிட பாஜகசார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சியில் இருந்தபோது, முதல்வர் எடியூரப்பா அமைச்சரவையில் கலி ஜனார்த்தனன் ரெட்டி அமைச்சராக இருந்தார். ஆனால், 2011ம் ஆண்டு சட்டவிரோதமாக சுரங்க உரிமையைப் பெற்ற ஊழல் வழக்கில் அமைச்சர் பதவியை ஜனார்த்தனன் ரெட்டி இழந்தார்.

2016-ம் ஆண்டு நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மக்கள் பணமில்லாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகி இருந்தனர். அந்த நேரத்தில் ரூ.500 கோடி செலவில் தனது மகளுக்கு மிக பிரமாண்டமாக திருமணம் செய்துவைத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஜனார்த்தனன் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பெல்லாரி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சோமசேகர ரெட்டி, தனது சகோதரர் ஜனதார்த்தன ரெட்டிக்கு உதவுவதற்காக நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்று சிக்கினார். தற்போது அவர் ஜாமீனில் இருந்து வருகிறார்.

ஊழல் புகார் சிக்கியவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடையாது என்று பாஜக அமித் ஷா கூறி இருந்தார். ஆனால், ஊழல்புகாரில்சிக்கி பதவியை இழந்த கட்டா சுப்பிரமண்யா, கிருஷ்ணய்யா ஷெட்டிக்கு சிவாஜிநகர், மலூர் தொகுதியில் போட்டியிட வாயப்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x