Last Updated : 17 Apr, 2018 03:11 PM

 

Published : 17 Apr 2018 03:11 PM
Last Updated : 17 Apr 2018 03:11 PM

‘புறா’ மூலம் தகவல் தொடர்பு: 70 ஆண்டுகள் பாரம்பரியத்தை பாதுகாக்கும் ஒடிசா போலீஸார்

வாட்ஸ் அப், மின் அஞ்சல், இன்ஸ்ட்டாகிராம், பேஸ்புக் என பல்வேறு வகையான விஷயங்கள் மூலம் இன்று ஒருவரை மிக விரைவாகத் தொடர்பு கொள்ளத் தொழில்நுட்ப வசதிகள் உருவாகிவிட்டன.

ஆனால், ஒடிசா மாநில போலீஸார் கடந்த 70ஆண்டுகளாகப் புறாக்கள் மூலம் தூதுவிடுவது, செய்திகளை அனுப்பும் பாரம்பரிய முறையைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். இதற்காகத் தனியாக புறக்காகளை பராமரிக்கும் பிரிவு போலீஸிடம் இருக்கிறது.

ஓடிசாவில் உள்ள மலைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருக்கும் போலீஸ் நிலையங்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், இந்தப் புறாக்கள் மூலம் தகவல்களை அனுப்பிப் பரிமாறிக்கொள்ளப்பட்டது. தொலைப்பேசி, செல்போன் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடையாத காலத்தில் இந்த நிலை இருந்தது. ஆனால், இதை இன்னும் ஒடிசா போலீஸார் கைவிடாமல் தொடர்ந்து வருவது வியப்பாகும்.

இதற்காக இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளை(ஐஎன்டிஏசிஎச்) மூலம் இந்தப் புறாக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் புறாக்களின் காலில் சிறு குப்பிகள் கட்டப்படும். அந்த குப்பிக்குள் காகிதத்தில் தேவையான செய்தியை எழுதி போலீஸார் அனுப்புகின்றனர். அந்தப் புறாக்கள் 25 கி.மீ தொலைவில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு ஏறக்குறைய 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்களுக்குள் சென்று சேர்ந்து விடுகின்றன. இந்தச் சேவைக்காக தற்போது 50 புறாக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து கட்டாக் மாவட்ட போலீஸ் எஸ்.பி. தாஸ் கூறியதாவது:

கடந்த 1946-ம் ஆண்டு 200 புறாக்களை, ராணுவத்தினர் சோதனை முயற்சியில் புறாக்கள் மூலம் தூது அனுப்ப ஒடிசா போலீஸாரிடம் ஒப்படைத்தனர். புறாக்கள் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறை என்பது, முகலாயர்கள் காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, புறாக்கள் காலில் உள்ள குப்பிக்குள் எழுதி வைக்கப்படும் காகிதத்தை 25கிமீ தொலைவில் உள்ள போலீஸ் நிலையத்தில் சென்று புறாக்கள் சேர்த்துவிடும். நாட்டிலேயே புறாக்கள் மூலம் தகவல் பரிமாறிக்கொள்ளும் சேவை ஒடிசா போலீஸாரிடம் மட்டுமே இருக்கிறது.

தொடக்கத்தில் கொராபுத் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ளப் புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. அந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டதன் மூலம், 700 பெல்ஜியம் நாட்டுப் புறாக்கள் வாங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, தற்போது அனைத்து மாவட்டங்களிலும் புறாக்கள் தகவல்தொடர்பு சேவை நடைமுறையில் இருக்கிறது.

குறிப்பாக மலைப்பகுதிகளில் இருக்கும் போலீஸ் நிலையங்கள் தகவல் தொடர்பு செல்ல முடியாத இடத்தில் இருக்கும் போலீஸ் நிலையங்கள், மழை, புயல் போன்ற பேரிடர் காலங்களில் இந்தப் புறாக்கள் சேவைப் பயன்படும்.

1982-ம்ஆண்டிலும்,கடந்த 1999-ம் ஆண்டிலும், கட்டாக் நகரை புயல் தாக்கியபோது, தகவல் தொடர்பு சாதனங்கள் முற்றிலும் செயல் இழந்துவிட்டன. ரேடியா, தொலைப்பேசி உள்ளிட்டவை சரிசெய்ய நாள் கணக்கில் ஆனது. அந்த நேரத்தில் இந்தப் புறாக்கள் மூலமே விரைவாகத் தகவல்கள் பரிமாறிக் கொண்டோம் எனத் தெரிவித்தார்.

பறவைகள் ஆர்வலர் பஞ்சமி மனு உகில் கூறுகையில், புறாக்கள் மூலம்தகவலை பரிமாறிக்கொள்ளும் நடைமுறையை 2 தலைமுறைகளுக்கு எடுத்துவந்துவிட்டோம், அதை அடுத்த தலைமுறையினர் எந்தவிதமான சேதமும் இல்லாமல் கொண்டு செல்லவேண்டும். பாரம்பரிய விஷயங்கள் மறக்கடிக்கப்படக்கூடாது. முகலாயர்கள் காலத்தில் போரின் போது தகவலை எளிதாகப் பரிமாறிக்கொள்ள இந்தப்புறாக்கள்தான் பயன்பட்டன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் புறாக்கள் சேவையைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x