Published : 17 Apr 2018 11:59 AM
Last Updated : 17 Apr 2018 11:59 AM

சிந்து சமவெளி மக்களை தென்னிந்தியாவுக்கு விரட்டிய ‘எல் நினோ’- ஆய்வில் புதிய தகவல்

சிந்து சமவெளி நாகரீக மக்கள் கடும் வறட்சி காரணமாக தென் பகுதிக்கு புலம் பெயர்ந்து சென்றதாக கராக்பூர் ஐஐடி ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகின் மிகப் பழமையான நாகரீகங்களில் ஒன்றான சிந்து சமவெளி நாகரிகம் 4,500 ஆண்டுகள் முதல் 8,000 ஆண்டுகள் பழமையானது என கருதப்படுகிறது. நாகரீகத்தின் தோற்றம் குறித்து வரலாற்று அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது.

சிந்து சமவெளி நாகரீகத்தின் புதைந்த நகரங்கள், மொகஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகள் இந்தியாவின் வடமேற்கு பகுதியிலும், இன்றைய பாகிஸ்தானிலும் இருக்கின்றன. மேம்பட்ட துப்புரவு அமைப்புகளுடன் கூடிய திட்டமிடப்பட்ட பெருநகரமைப்பு இந்திய நாகரீக தொன்மையை வெளிப்படுத்துகின்றன.

சிந்து சமவெளி நாகரீகம் நிலவிய காலம் குறித்த குழப்பம் இருப்பது போலவே, அது அழிந்துபோனதற்கான காரணமும் இதுவரை உறுதிப்படவில்லை. எனினும் எகிப்து உட்பட பிறநாகரீகங்கள் அழிந்தது போலவே சிந்து சமவெளி நாகரீகமும், வறட்சியால் அழிந்து இருக்கலாம் என சில ஆண்டுகளுக்கு முன் சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது குறித்து காரக்பூரில் உள்ள ஐஐடி பேராசிரியர் அனில் கே.குப்தா தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அடங்கிய குழு ஆய்வு ஒன்றினை நடத்தியது.

அதில் , சிந்து சமவெளி பகுதி, நன்கு மேம்பாடு அடைந்த கட்டமைப்பு வசதிகளையும், கட்டுமான கலையையும் கொண்டது. அம்மக்கள், உலகின் பல்வேறு நாகரிக மக்களுடன் வர்த்தக, கலாசார உறவு கொண்டிருந்தனர். 4,300 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி நாகரீக காலத்தில் கடும் வறட்சி நிலவியது தெரிய வந்துள்ளது.

பல ஆண்டுகள் நிலவிய இந்த வறட்சியால் மக்கள் கூட்டம், சிந்து நதி கரை பகுதியை விட்டு கங்கை நதி கரைப்பகுதிக்கு புலம் பெயர்ந்ததாக கூறப்படுகிறது. கடந்த 5 ஆயிரம் ஆண்டு காலங்களில் நிலவிய காலநிலை குறித்தும், அதனால் பூமியில் இருந்த தண்ணீரின் அளவு குறித்து காரக்பூர் ஐஐடி நிறுவனத்தின் நிலவியல் மற்றும் நில இயற்பியல் துறை பேராசிரியர்கள் உறுதி செய்து இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

4,350 ஆண்டுகளுக்கு முன் சிந்து நதி பகுதியில் கடும் வறட்சி இருந்ததை உறுதிபடுத்தியுள்ளனர். எல் நினோ' விளைவு காரணமாக, சிந்து சமவெளியில் 900 ஆண்டுகளாக வறட்சி நீடித்தது. அதற்காக, மழை பெய்யவில்லை என்று அர்த்தம் அல்ல. நீரோட்டம் குறைந்துவிட்டது. அதனால், அப்பகுதி வறண்டப் பிரதேசம் ஆனது.

விவசாயத்துக்கும், கால்நடைகளுக்கும் போதிய தண்ணீர் இல்லை. இவைதான் அம்மக்களின் முக்கியமான தொழில்கள் என்பதால், அவர்கள் பருவமழை அதிகமாகப் பெய்யும் இந்தியாவின் தென்பகுதிக்கும், கிழக்குப் பகுதிக்கும் இடம்பெயர்ந்தனர்

இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வறட்சி குறைவாக இருந்ததால் அந்த பகுதிக்கு மக்கள் சென்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x