Last Updated : 17 Apr, 2018 08:33 AM

 

Published : 17 Apr 2018 08:33 AM
Last Updated : 17 Apr 2018 08:33 AM

2 இடங்களில் போட்டியிட விரும்பிய சித்தராமையாவின் கோரிக்கையை நிராகரித்தார் ராகுல் காந்தி; சாமுண்டீஸ்வரி தொகுதியை மட்டும் ஒதுக்கினார்

கர்நாடக முதல்வர் சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிட விரும்பினார். அவரது கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிராகரித்துள்ளார்.

கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 218 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் நேற்றுமுன்தினம் இரவு வெளியிட்டது. அதில் முதல்வர் சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் மட்டுமே போட்டியிடுவார் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாஜக மாநில தலைவர் எடியூரப்பாவும் மஜத தேசிய தலைவர் தேவகவுடாவும் சித்தராமையா எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோற்கடிப்போம் என சவால் விடுத்தனர். இதனால் சித்தராமையா ஒரு தொகுதிக்கு பதிலாக இரு தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்தார். குறிப்பாக தனது சொந்த மாவட்டமான மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி தொகுதியிலும், பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாதாமி தொகுதியிலும் போட்டியிட திட்டமிட்டார்.

இதற்காக 3 மாதங்களாக இரு தொகுதிகளிலும் உள்ள கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார். கடந்த இரு மாதங்களில் இரு தொகுதிகளிலும் சிறப்பு கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்தார். சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய இரு தொகுதிகளில் தனக்கும், வருணா தொகுதியில் தன் மகன் யதீந்திராவுக்கு சித்தராமையா விருப்ப மனு அளித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடமும் இதுகுறித்து கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக ராகுல் காந்தி கர்நாடக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய போது மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில தலைவர் பரமேஷ்வர் ஆகியோர் கடுமையாக எதிர்த்தன‌ர். சித்தராமையாவுக்கு இரு தொகுதிகள் வழங்கினால் தனக்கும் இரு தொகுதிகள் வழங்க வேண்டும் என பரமேஷ்வர் போர்க்கொடி தூக்கியதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல் காந்தி, சித்தராமையாவுக்கு சாமூண்டீஸ்வரி தொகுதியை மட்டும் ஒதுக்கினார். இந்த தொகுதியில் சித்தராமையா ஏற்கெனவே 3 முறை வெற்றியும், 2 முறையும் தோல்வியும் அடைந்துள்ளார்.

தமிழரை வேட்பாளராக்கிய காங்கிரஸ்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் நீண்ட காலத்துக்கு பிறகு காங்கிரஸ் சார்பில் தமிழரும், தற்போதைய பெங்களூரு மாநகராட்சியின் மேயருமான சம்பத்ராஜ், சி.வி.ராமன் நகருக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் மேயர் பத்மாவதி, ராஜாஜி நகரிலும், நடிகர் அம்பரீஷ், மண்டியாவிலும் போட்டியிடுகின்றனர். 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் சாந்தி நகர், மேல்கோட்டை, சிந்தகி உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத காங்கிரஸார் நேற்று பெங்களூரு, மண்டியா, சிக்மகளூர் ஆகிய இடங்களில் கட்சி அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x