Last Updated : 17 Apr, 2018 08:07 AM

 

Published : 17 Apr 2018 08:07 AM
Last Updated : 17 Apr 2018 08:07 AM

தாஜ்மகால் இந்திய அரசுக்கு சொந்தம்; வக்ஃபு வாரியத்துக்கு சொந்தம் அல்ல- மொகலாய மன்னர் பகதூர் ஷா வாரிசு கருத்து

தாஜ்மகால் இந்திய அரசுக்கு சொந்தமானதே தவிர வக்ஃபு வாரியத்திற்கு அல்ல என்று மொகலாய மன்னர் பகதூர் ஷா ஜபரின் கொள்ளுப்பேரனான யாகூப் ஹபீபுதீன் டுசி கூறியுள்ளார்.

தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மகாலை கட்டிய மன்னர் ஷாஜஹானுக்கு ஆக்ராவில் கடந்த வெள்ளிக்கிழமை 363-வது பிறந்தநாள் உருஸ் விழா கொண்டாடப்பட்டது. ஆக்ராவாசிகளால் வருடந்தோறும் 3 நாள் கொண்டாடப்படும் இந்த விழாவில் ஷாஜஹானின் சமாதிக்கு மலர் போர்வை விரிக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொள்ள மொகலாயர்களின் கடைசி மன்னரான பகதூர் ஷா ஜபரின் வாரிசுகளில் ஒருவரான யாகூப் ஹபீபுதீன் டுசி வந்திருந்தார். தான் வசிக்கும் ஹைதராபாத் திரும்புவதற்கு முன் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு அவர் பேட்டி அளித்தார். அவரிடம் அயோத்தி சமரசப் பேச்சு குறித்தும் தாஜ்மகாலுக்கு உரிமை கோரி உச்ச நீதிமன்றத்தில் உ.பி. வக்ஃபு வாரியம் வழக்கு தொடர்ந்துள்ளது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதில் தாஜ்மகால் குறித்த கேள்விக்கு யாகூப் பதில் அளிக்கும்போது, “வக்ஃபு வாரியத்திற்கு தாஜ்மகால் சொந்தம் என்று மன்னர் ஷாஜஹான் எழுத்துமூலம் எதுவும் அளிக்கவில்லை. சன்னி வக்ஃபு வாரியத்தினர் நில ஆக்கிரமிப்பாளர்கள். அவர்கள் அலுவலகத்தில் மேஜை, நாற்காலிகள் கூட முறையாக பராமரிக்கப்படாது. இவர்களால் தாஜ்மகாலை எப்படி நிர்வகிக்க முடியும்? மொகலாயர்களின் நேரடி வாரிசாக நான் இருக்கிறேன். இதை அடிப்படையாக வைத்து சன்னி வக்ஃபு வாரியத்தின் முத்தவல்லியாக என்னை அமர்த்தவேண்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். இதன் தீர்ப்பு எனக்கு சாதகமாக வெளியாகும்போது நான் தாஜ்மகாலை இந்தியாவுக்கு அர்ப்பணிப்பேன். தாஜ்மகால் இந்திய அரசின் சொத்தே தவிர, வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானது அல்ல. அதன் மீது எவரும் உரிமை கோர முடியாது” என்றார்.

அயோத்தி ராமர் கோயில் மற்றும் பாபர் மசூதி சமரசப் பேச்சு வார்த்தை குறித்து யாகூப் கூறும்போது, “அங்கு இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு வழிவகுக்க எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறேன். அங்கு கோயில் கட்ட தடை விதிக்க எந்தக் காரணமும் இல்லை” என்றார்.

தாம் தான் பாபர் மசூதியின் உண்மையான வாரிசு எனக் கூறும் யாகூப் ஹபீபுதீன், சமரசம் பேசும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை சமீபத்தில் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x