Last Updated : 16 Apr, 2018 05:11 PM

 

Published : 16 Apr 2018 05:11 PM
Last Updated : 16 Apr 2018 05:11 PM

விவசாயிகளுக்கு நல்லசெய்தி; இந்த ஆண்டு 97% பருவமழை இயல்பாகவே இருக்கும்: ஐஎம்டி அறிவிப்பு

 

நாட்டுப் பொருளாதாரமும், விவசாயிகளும் செழிப்பாக இருக்கும் வகையில், இந்த ஆண்டு பருவ மழை இயல்பானதாக இருக்கும், பற்றாக்குறையாக இருக்க வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையம் இன்று அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பருவமழையில் 95 சதவீதம் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு 97 சதவீதம் வரை இயல்பான மழை கிடைக்க அதிகமான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை மையத்தின் இயக்குநர் தலைவர் கே.ஜே. ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் மே கடைசி வாரம் அல்லது ஜூன் முதல் வாராம் கேரளாவில் தொடங்கும். அந்த வகையில் கடந்த ஆண்டு பருவமழையில் இயல்பாகவே இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்தது அதற்கேற்றார்போல் இருந்தது.

இந்நிலையில், பருவமழை தொடங்குவதற்கு இன்னும் 50 நாட்களுக்கும் குறைவாக இருக்கும் நிலையில், அதுகுறித்து முதல் கட்டக் கணிப்பு அறிக்கையை இந்திய வானிலை மையம் இன்று அறிவித்தது.

கடந்த 4-ம் தேதி தனியார் வானிலை மையமான ஸ்கைமெட் விடுத்த அறிக்கையில், 2018-ம் ஆண்டு பருவமழை நீண்டகால சராசரியில் இயல்பானதாக இருக்கும், ஜூன் முதல் செப்டம்பர் மாதங்கள் வரை ஏறக்குறைய 887 மி.மீ. மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. பற்றாக்குறை நிலவ வாய்ப்பு கிடையாது என்று அறிவித்து இருந்தது.

இந்நிலையில் இந்திய வானிலை மையத்தின் தலைமை இயக்குநர், கே.ஜே.ரமேஷ் நிருபர்களுக்கு டெல்லியில் பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:

''ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும், 2018-ம் ஆண்டு பருவமழை நீண்டகால சராசரியில் 97 சதவீதம் இயல்பானதாகவே இருக்கும். கடந்த ஆண்டு 95 சதவீதம் இயல்பான மழை இருப்பதாகக் கணிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதைக்காட்டிலும் கூடுதலாக 2 சதவீதம் இயல்பு மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இந்த ஆண்டு பற்றாக்குறை மழை பெய்ய வாய்ப்பு கிடையாது. இயல்பான மழை 42 சதவீதம் பெய்வதற்கு சாத்தியமுள்ளது, 12 சதவீதம் இயல்புக்கும் அதிகமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு பருவமழை இயல்பான நிலையில் பெய்ய நல்ல வாய்ப்பு உள்ளது.

பருவமழை எப்போது தொடங்கும் என்பது குறித்து மே மாதத்தில் 15-க்குப் பின் அதிகாரபூர்வமாக அறிவிப்போம். வழக்கமாக மே இறுதிவாரம், அல்லது ஜூன் முதல் வாரத்தில் தொடங்க வேண்டும். இந்த ஆண்டும் அதையொட்டித்தான் இருக்கும் என நம்புகிறோம்.''

இவ்வாறு ரமேஷ் தெரிவித்தார்.

நீண்டகால சராசரியில் (எல்பிஏ) சராசரி மழை என்பது 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரை வாய்ப்பு இருப்பதாகும். 104 முதல் 110 வரை இருப்பது நீண்ட கால சராசரியில் இயல்பவைவிட கூடுதல் மழை என்றும் 110க்கு மேல் சென்றால், இயல்பைக்காட்டிலும் அதிகமானது என்று பொருளாகும்.

தொடர்ந்து 3-வது ஆண்டுகள் நாட்டில் இயல்பான மழை இருக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x