Last Updated : 16 Apr, 2018 04:33 PM

 

Published : 16 Apr 2018 04:33 PM
Last Updated : 16 Apr 2018 04:33 PM

காஷ்மீர் சிறுமி பலாத்காரம்; ஆசிஃபாவின் குடும்பத்துக்கும், வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

 காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமி ஆசிஃபாவின் குடும்பத்துக்கும், வழக்கை நடத்தும் வழக்கறிஞர்கள் இருவருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க ஜம்மு காஷ்மீர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டம், ரஸினா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்த ஜனவரி மாதம் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக 3 போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 8 பேரும் இன்று கதுவா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களுக்கு 400 பக்க குற்றப்பத்திரிகையின்  நகல் வழங்கப்பட்டது.

இதற்கிடையே காஷ்மீர் மாநிலத்தில் இந்த வழக்கு நடந்தால், நேர்மையாக நடக்காது, ஆதலால், ஹரியாணா மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு வாதாடும் வழக்கறிஞர்கள் இருவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கான்வில்கர், டி.ஓய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் நீதிபதி இந்திரா ஜெய்சிங் ஆஜராகி வாதாடினார்.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ''பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ஜம்மு காஷ்மீர் அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதேபோல பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வாதாடும் வழக்கறிஞர்கள் தீபிகா ரஜாவத், தலிப் ஹூசைன் ஆகியோருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாதுகாப்பில் ஈடுபடும் போலீஸார் சீருடையில் இல்லாமல் சாதாரண ஆடையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இந்த வழக்கை ஹரியாணாவுக்கு மாற்றக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் அரசு வரும் 27-ம்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். வழக்கை 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம் வழக்கை வேறு மாநிலத்தில் விசாரணை செய்ய உத்தரவிட வேண்டுமா எனக் கேட்டனர். அப்போது, ஜம்முகாஷ்மீர் போலீஸாரின் விசாரணை மனநிறைவு அளிக்கும் வகையில், இருக்கிறது, வேறு மாநிலத்துக்கு மாற்றத் தேவையில்லை என்று அவர் பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x