Published : 15 Apr 2018 07:33 PM
Last Updated : 15 Apr 2018 07:33 PM

அலைய வேண்டாம், புகார்களுக்காக தனி ஆப்ஸ்: ரயில்வே விரைவில் அறிமுகம்

ரயில்களில் கழிவறை சுத்தம், உணவுகளின் தரம், அவசர உதவி என அனைத்துக்கும் தனித்தனி புகார் எண்கள் இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் அனைத்துக்கும் தீர்வு காணுவிதமாக, புகார்களுக்காக தனி ஆப்ஸை(செயலி) ரயில்வே துறை உருவாக்கியுள்ளது.

இந்த செயலியை இந்த மாத இறுதியில் ரயில்வே அறிமுகம் செய்யும் எனத் தெரிகிறது. இந்த செயலிக்கு எம்.ஏ.டி.ஏ.டி. எனப் பெரிடப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் பயணிகள் தங்களின் பயணத்தின் போது, தங்களுக்கு ஏற்படும் அசவுகரியங்கள், உணவு குறித்த புகார்கள், கழிப்பறை குறித்த புகார்கள், ரயில்பெட்டிகளில் சுத்தம், பாதுகாப்பு தொடர்பான புகார்கள் அனைத்தையும் இதில் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் அனைத்தும் அந்தந்த குறிப்பிட்ட துறைகளுக்கும், அதிகாரிகளுக்கும் மாற்றப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் அவசர நேரத்தில் இதில் இருந்தே புகார்கள் அளிக்கலாம். பயணிகள் தாங்கள் கொடுத்த புகார்கள் எந்த அளவில் இருக்கிறது, அது பரிசீலிக்கப்பட்டதா , அதன் நிலை என்ன என்பது குறித்தும் இதில் தெரிந்து கொள்ள முடியும்.

இது குறித்து ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ரயில் பயணிகள் தங்கள் குறைகளைக் கூறி புகார்கள் அளிக்க இதுவரை 14 வகையான புகார் எண்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, இந்த ஆப்ஸ் வடிவமைத்துள்ளோம். இந்த ஆப்ஸில் புகார் செய்யும் பயணிகளுக்கு உடனுக்குடன் பதிலும், புகார்கள் மீதான நடவடிக்கை குறித்த அறிவிப்பும் செய்யப்படும்.வெளிப்படையான நிரந்தரமான குறைதீர்ப்பு முறையாக இந்த செயலி இருக்கும். இந்த மாத இறுதியில் இந்த ஆப்ஸ் அறிமுகம் செய்யப்படும்’ எனத் தெரிவித்தார்.

பயணிகள் தங்களின் பிஎன்ஆர் எண்ணை பதிவு செய்து, இந்த ஆப்ஸில் புகார் தெரிவிக்கலாம். உடனுக்குடன் அவர்களுக்கு ஐடி எண் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். அந்த புகார் பதிவு எண் மூலம் தங்களின் புகார் எந்த இடத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும், மாதத்துக்கு எத்தனை புகார்கள் வந்துள்ளன, அதில் எத்தனை தீர்க்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

நாட்டின் தரவரிசையில் முதல் மற்றும் கடைசி 5 இடங்களில் இருக்கும் ரயில் நிலையங்கள் குறித்த அறிவிப்பு, ராஜ்தானி, சதாப்தி ரயில்கள் குறித்த அறிவிப்புகள் போன்றவையும் இடம் பெற்று இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x