Published : 15 Apr 2018 05:59 PM
Last Updated : 15 Apr 2018 05:59 PM

பெண்ணுடன் டேட்டிங் ஆசை: சபலத்தில் ரூ.60 லட்சத்தை இழந்த தொழிலதிபர்

பெண்ணுடன் ஆன்-லைனில் சாட்டிங் செய்து டேட்டிங்குக்கு ஆசைப்பட்டு, பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ரூ.60 லட்சத்தை இழந்துள்ளார்.

இது குறித்து பெங்களூரு நகர சைபர்கிரைம் போலீஸார் கூறியதாவது: பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஸ்(பெயர்மாற்றப்பட்டுள்ளது). இவர் இணையத்தில் டேட்டிங் செய்வதற்காக செயல்பட்டுவரும் சில இணைதளங்களில் தன்னுடைய பெயரை பதிவு செய்துள்ளார். கடந்த 2017,ம் ஆண்டு ஜூலை 18-ம்தேதி ‘சோம்பா76’ என்ற முகவரியில் ஒருப பெண் சதீஸை தொடர்பு கொண்டுள்ளார்.

அந்த பெண் தன் பெயர் அர்பிதா என்றும், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்றும் அறிமுகம் செய்துள்ளார். இவர்களுக்கு இடையிலான முதல் சாட்டிங்கில் இருவரும் ஒருவொருக்கு ஒருவர் மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டனர். அதன்பின் வாட்ஸ்அப், பேஸ்புக் முகவரியை அளித்து புகைப்படங்களையும் பரிமாறிக் கொண்டனர்.

இருவருக்கும் இடையிலான நட்பு சில மாதங்கள் சென்றது. அதன்பின் அர்பிதா ஒருநாள் சதீஸ்க்கு மொபைல் போனில் அழைத்துள்ளார். தன்னுடைய அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் கொல்கத்தா பி.எம்.பிர்லா இதய சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இரு்க்கிறார். உடனடியாக ரூ.30 ஆயிரம் தேவை அளித்து உதவ முடியுமா என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டு மனம் இளகிய சதீஸ், உடனடியாக ரூ.30 ஆயிரத்தை அர்பிதா கூறிய வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்துள்ளார்.

இதேபோல, 2017, டிசம்பர் 15 முதல் 2018, ஜனவரி 23 வரை பலமுறை சதீஸ் பல லட்சங்களை அர்பிதா கூறிய வங்கிக்கணக்குக்கு பரிமாற்றம் செய்துள்ளார்.

இதில் ரூபாலி மஜும்தார் என்பவர் வங்கிக் கணக்குக்கு ரூ.19லட்சம், குல்சன் மஜும்தார் என்பவரின் வங்கிக்கணக்குக்கு ரூ.40.7 லட்சம் பணத்தை சதீஸ் பரிமாற்றம் செய்துள்ளார். இந்நிலையில், நாட்கள் செல்லச் செல்ல அர்பிதா சதீஸுடன்பேசுவதைக் குறைத்தார். திடீரென்று அவரின் செல்போன், வாட்ஸ்அப் எண் அனைத்தும் செயல்பாட்டில் இருந்து முடக்கப்பட்டது. இதையடுத்து சந்தேகம் அடைந்த சதீஸ், அப்போதுதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இதையடுத்து, பெங்களூரு சைபர்கிரைம் போலீஸில் அர்பிதா குறித்தும், தான் பணம் பரிமாற்றம் செய்த வங்கிக்கணக்கு விவரங்களை அளித்து சதீஸ் புகார் செய்தார். தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சைபர் கிரைமில் உள்ள மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இன்று இணையத்தில் செயல்படும் திருமணத் தகவல் மையங்களில் பெரும்பாலனவை போலியாக இருக்கின்றன. அதிலும் தனியாக இருக்கும், ஆண்கள், பெண்களுக்கு வயதுக்கு ஏற்றார்போல் திருமணம் செய்துவைக்க ஆசை வார்த்தை கூறி நடத்தப்படுகின்றன. இவர்களின் நோக்கம் எல்லாம் வசதியானவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரை வளைத்து ஏமாற்றி பணம் பறிப்பதை குறிக்கோளாக வைத்துள்ளனர். அந்த வகையில் இந்த தொழிலதிபர் சிக்கிஇருக்கிறார்’என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x