Last Updated : 15 Apr, 2018 03:04 PM

 

Published : 15 Apr 2018 03:04 PM
Last Updated : 15 Apr 2018 03:04 PM

காஷ்மீர் போல் அடுத்த கொடூரம்: 11 வயது சிறுமி உடலில் 86 காயங்களுடன் சடலமாக மீட்பு

குஜராத் மாநிலம், சூரத் நகரில் 11 வயது சிறுமி உடலில் 86 காயங்களுடன், 8 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டநிலையில் சடலமாகப் மீட்கப்பட்டுள்ளார்.

காஷ்மீர் கதுவாவில் 8 வயது சிறுமி 7 நாட்கள் கூட்டுப் பலாத்காரத்துக்கு ஆளான நிகழ்வு நாட்டையே உலுக்கிவிட்டநிலையில், அடுத்த அதிர்ச்சி நடந்துள்ளது. இதேபோல உத்தப்பிரதேசம் உன்னாவ் நகரில் மைனர் சிறுமியை பாஜ எம்எல்ஏ உள்ளிட்ட சிலர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமும் பெரிய எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பேரணி நடத்தி கண்டனம் தெரிவித்தபின், பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கதுவா, உன்னாவ் சம்பவத்தின் அதிர்வலையில் அடங்குவதற்கு சூரத் நகரில் 11வயது சிறுமி பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சூரத் நகர போலீஸ் ஆய்வாளர் பி.கே.ஜலாலா கூறியதாவது:

கடந்த 6-ம் தேதி எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் சூரத் நகரின் பேஸ்டான் நகரில் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள பகுதியில் 11வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் கிடப்பதாக கூறினார்கள். அங்கு சென்று அந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினோம்.

அந்த ஆய்வில் அந்த சிறுமியின் உடலில் 86 காயங்கள் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக அந்த சிறுமியின் மர்ம உறுப்புகள் சிதைக்கப்பட்டு இருந்துள்ளது. ஏறக்குறைய 8 நாட்கள்வரை இந்த சிறுமி சித்ரவைத்கு உள்ளாக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுஇருக்கலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறுதியாக இந்த சிறுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டு இருக்கிறார்கள்.

இந்த சிறுமிக்கு போதை மருந்து ஏதும் கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். இந்த சிறுமியின் பெற்றோர் யார் என்பதையும் கண்டறியும் வகையில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.

அந்த சிறுமியின் உடலில் ஏதோ மரத்தினாலா பொருளைக் கொண்டு தாக்கி காயப்படுத்தியற்கான அடையாளங்கள் அதிகமாக காணப்படுகின்றன. இதுவரை இந்த சிறுமியின் பெற்றோர் கண்டுபிடிக்க முடியாததால், இந்த சிறுமிவேறு இடத்தில் இருந்து கடத்தி வரப்பட்டு, இங்கு கொலை செய்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறோம். போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சிறுமி குறித்தும், குடும்பம் குறித்தும் தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.20 ஆயிரம் சன்மானம் அறிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x