Last Updated : 08 Apr, 2018 02:10 PM

 

Published : 08 Apr 2018 02:10 PM
Last Updated : 08 Apr 2018 02:10 PM

மனைவி என்பவர் சொத்து கிடையாது; தன்னுடன் வாழ கணவன் கட்டாயப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

மனைவி என்பவர் திடப் பொருளோ அல்லது சொத்தோ கிடையாது. தன்னுடன்தான் சேர்ந்து வாழ வேண்டும் என்று கணவர் விரும்பினால் கூட, மனைவிக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே அது நடக்கும், அவரைக் கட்டாயப்படுத்தி வாழ வைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கணவர் தன்னை கொடுமைப்படுத்துகிறார், அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து பெற வேண்டும். ஆனால், அதற்கு கணவர் சம்மதிக்க மறுக்கிறார். தன்னுடன் வாழ தொடர்ந்து கட்டாயப்படுத்துகிறார் என்று பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவைத் தாக்கல் செய்த பெண்ணும், அவரின் கணவரும் நன்கு படித்தவர்கள், இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள். இருவருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. ஆனால், அதற்கு இருவரும் சம்மதிக்கவில்லை, அந்தக் குழுவின் ஆலோசனையையும் இருவரும் ஏற்கவில்லை.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன் அந்தப் பெண் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்தப் பெண்ணின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண் கணவனால் மிகுந்த கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அவருடன் தொடர்ந்து வாழ அவருக்கு விருப்பமில்லை. விவாகரத்து கொடுக்க விரும்புகிறோம் என்ற போதிலும், அதற்கு கணவர் உடன்பட மறுக்கிறார். அவர் மீது கொடுத்த புகார்களை வாபஸ் பெறுகிறோம். ஆனால், கணவருடன் சேர்ந்து வாழ மனுதாரரை கட்டாயப்படுத்தக் கூடாது’ என்று தெரிவித்தனர்.

ஆனால், கணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில், ‘மனைவி என்பவர் திருமணத்துக்குப் பின் கணவருக்கு சொந்தம், அவர் கணவருடன் தான் வாழ வேண்டும். மனைவிக்கு விருப்பமில்லாவிட்டாலும், அவரிடம் சமாதானம் பேசி நீதிமன்றம் சேர்த்து வைக்க வேண்டும்’ எனத் தெரிவித்தனர்.

இருதரப்புவாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

மனைவி என்பவர் ஒரு திடப்பொருள் கிடையாது. திருமணம் செய்துகொண்டதால், அவர் கணவருக்கு சொத்துகிடையாது. சொத்தாகவும் கருத முடியாது. திருமணத்துக்கு பின் மனைவியுடன் வாழ கணவருக்கு விருப்பம் இருந்தால் கூட மனைவி விரும்பினால் மட்டுமே வாழ முடியும்.

தன்னுடன்தான் வாழ வேண்டும் என்று மனைவியை கணவர் கட்டாயப்படுத்துதல் கூடாது. உங்களுடன் வாழ விருப்பம் இல்லாத ஒரு பெண்ணை எப்படி, உங்களுடன் வாழ கட்டாயப்படுத்த முடியும்.

விருப்பமில்லாத பெண்ணுடன் வாழ வேண்டும் என்ற கணவரின் ஆசையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அந்தப் பெண்ணின் கணவர் அவரை ஒரு திடப்பொருள் போல், சொத்துபோல் நடத்தியுள்ளார். பெண் என்பவர், மனைவி என்பவர் சொத்து கிடையாது. இந்தவழக்கை ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x