Last Updated : 23 Mar, 2018 03:38 PM

 

Published : 23 Mar 2018 03:38 PM
Last Updated : 23 Mar 2018 03:38 PM

அதிமுக, டிஆர்எஸ் கட்சி எம்.பி.க்கள் கடும் அமளி: 15-வது நாளாக மக்களவை முடங்கியது

 

அதிமுக, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்.பி.க்களின் தொடர் அமளியால், மக்களவை 15-வது நாளாக இன்றும் ஒத்திவைக்கப்பட்டது.

எம்.பி.க்களின் கூச்சல், குழப்பம் காரணமாக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் 5-வது நாளாக விவாதத்துக்கு ஏற்கப்படவில்லை. திங்கள்கிழமை ராமநவமி என்பதால், அன்று நாடாளுமன்றத்துக்கு விடுமுறை விடப்பட்டு, செவ்வாய்க்கிழமை மீண்டும் அவை கூடும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

அவை தொடங்கியவுடன், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின், கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அவையில் உறுப்பினர்கள் அமைதிகாத்தால்தான் மற்ற பணிகளை நடத்த முடியும் என்று எம்.பி.க்களிடம் மகாஜன் கேட்டுக்கொண்டார்.

ஆனால் அதிமுக எம்.பிக்களும்,டிஆர்எஸ் எம்.பிக்களும் கையில் பதாகைகளை ஏந்தி அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்.பி.க்களும், முஸ்லிம்களுக்கு அதிக இடஒதுக்கீடு வழங்கக் கோரி டிஆர்எஸ் கட்சி எம்.பி.க்களும் கோஷமிட்டனர்.

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தக் கோரி தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் கட்சியின் எம்.பி.க்களும் ,எஸ்சி, எஸ்டி சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிகார காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

பீஹார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பப்புயாதவ் எம்.பிய பதாகையை ஏந்தி அவரும் முழக்கமிட்டார்.

இந்த கூச்சலுக்கும், குழப்பத்துக்கும் மத்தியில் கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்ள அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் முயன்றார். ஆனால், எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், அவையை ஒத்திவைத்தார்.

11 மணிக்கு மேல் அவை மீண்டும் கூடியபோதும் இதே நிலைதான் நீடித்தது. அப்போது பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அவையில் தொடர்ந்து கூச்சலும் குழப்பமும் நீடிப்பதால், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எடுத்துக்கொள்ள முடியாது. உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷமிட்டால், தீர்மானத்துக்கு யார் ஆதரவு தருகிறார்கள்,எதிர்க்கிறார்கள் என்பதை என்னால் கண்டுபிடிக்க இயலாது.

குறைந்தபட்சம் 50 எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால்தான் அவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது விவாதம் நடத்த அனுமதிக்க முடியும். விவாதம் நடத்த அரசு தயார் என்கிறது. ஆனால், உறுப்பினர்கள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

ஆனால், தொடர்ந்து எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவையை நாள்முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

இதனால், தொடர்ந்து 15-வது நாளாக மக்களவை  இன்று முடங்கியது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x