Published : 23 Mar 2018 01:34 PM
Last Updated : 23 Mar 2018 01:34 PM

ஒரு ஆப்ஸ், 100 சேவைகள் - கேரள அரசின் ‘எம்கேரளா’ திட்டம் தொடக்கம்: ஆயிரம் இடங்களில் இலவச வைஃபை

இணையம் பயன்படுத்துவது மனிதர்களின் உரிமை என்று நாட்டிலேயே முதல்முறையாக அறிவித்த கேரள மாநிலம், அங்கிருக்கும் மக்களுக்காக ஒரே ஆப்ஸ் மூலம் 100 சேவைகளை வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது.

‘எம்கேரளா’ எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆப்ஸ் மூலம் அரசின் 20 துறைகளில் இருந்து மக்கள் தங்களுக்கு தேவையான 100 சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். விரைவில் 80 துறைகளில் இருந்து ஆயிரம் சேவைகளாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

இந்த எம்கேரளா ஆப்ஸை கேரள மாநில தகவல் தொழில்நுட்ப இயக்கத்தினர் உருவாக்கியுள்ளனர். கொச்சியில் கடந்த 2 நாட்கள் நடந்த டிஜிட்டல் மாநாட்டில் இந்த செயலியை முதல்வர் பினராயி விஜயன் அறிமுகம் செய்தார்.

இந்த செயலி குறித்து மாநில மின்னணு நிர்வாக இயக்க குழுவின் முரளீதரன் மானிங்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

‘‘எம்கேரளா ஆப்ஸ் மூலம் முதல்கட்டமாக 20 அரசு துறைகளில் இருந்து 100விதமான சேவைகளை மக்கள் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் 80 துறைகளில் இருந்து ஆயிரம் சேவைகளை மக்கள் பெறும் வகையில் சேர்க்கப்படும்.

இதேபோன்ற சேவைகள் ஏற்கனவே கேரள அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தாலும், மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் மொபைல்போன் மூலம் கிடைக்க வேண்டும் என எண்ணினோம்.

இதன் மூலம் மக்களுக்கு அரசின் சேவைகளைப் பெற எந்தவழி வசதியாக இருக்கிறதோ அதை தேர்வு செய்து பெறலாம். அரசின் சேவைகளைப் பெற மக்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு சேவையைப் பெற ஒவ்வொரு அலுவலகமாகவும் செல்லத் தேவையில்லை. அனைத்தையும் ஒரே மொபைல் ஆப்ஸிஸ் கொண்டு வந்திருக்கிறோம்.

அதுமட்டுமல்லாமல் முதல்கட்டமாக மாநிலத்தில் ஆயிரம் இடங்களில் மக்களுக்கு இலவசமாக வைபை இணைய வசதி கிடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவமனைகள், பேருந்துநிலையங்கள், பூங்காக்கள், நூலகங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டமுக்கிய பகுதிகளில் இலவச வைஃபை வசதி செய்யப்பட உள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வைஃபை கிடைக்கும் வசதி 5 ஆயிரம் இடங்களாக அதிகரிக்கப்படும்’’

இவ்வாறு முரளீதரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x