Last Updated : 23 Mar, 2018 08:13 AM

 

Published : 23 Mar 2018 08:13 AM
Last Updated : 23 Mar 2018 08:13 AM

மத்திய அமைச்சரின் ‘செயல் திட்டம்’ அறிவிப்பால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல்

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவது குறித்து 4 மாநில அரசுகளுடன் பேசி, ‘செயல் திட்டத்தை’ உருவாக்க‌ முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நீர்வ‌ளத் துறை யின் இணை அமைச்சர் தெரி வித்துள்ளார்.

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அதிமுக எம்.பி. வேணுகோபால் மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய நீர்வ‌ளத் துறையின் இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வால் எழுத்துப்பூர்வமாக பதிலை தாக்கல் செய்தார்.

அதில், “கடந்த பிப்ரவரி 20-ம் தேதி மத்திய நீர்வளத்துறையின் தென்னக மண்டல கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசின் சார்பாக உருவாக்கப்படும் ‘செயல் திட்டத்தை’ (காவிரி மேலாண்மை வாரியம் அல்ல) 4 மாநில அரசுகளும் சேர்ந்து உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நதிநீர் பங்கீடு சட்டப்பிரிவு 6ஏ-ன் படி ‘செயல் திட்டம்’ (ஸ்கீம்) உருவாக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற சர்வதேச தண்ணீர் தின விழாவில் பங்கேற்ற மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம், காவிரி மேலாண்மை வாரியம் எப்போது அமைக்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்க மறுத்த நிதின் கட்கரி அங்கிருந்து வெளியேறினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த காலக் கெடு இம் மாத இறுதிக்குள் நிறைவடைய உள்ளது. ஆனால் மத்திய அரசு தரப்பில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்த உறுதியான அறிவிப்பு வெளிவராதது தமிழக விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புரியாதது போல் நடிப்பதா?

கடந்த 9-ம் தேதி நடந்த மத்திய நீர்வளத் துறைக் கூட்டத்தில் தமி ழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியது. அப்போது கர்நாடக அரசின் தலைமைச் செயலர் ரத்ன பிரபா அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் (காவிரி மேனேஜ்மென்ட் போர்ட்) என்கிற வார்த்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. எனவே உச்ச நீதிமன்றம் பயன்படுத்தியுள்ள ‘செயல் திட்டம்’ (ஸ்கீம்) என்பதை பற்றியே பேச வேண்டும் என வலியுறுத்தினார்.

கர்நாடக அரசின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அதிகாரிகள், “காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதை ஏற்றுக்கொண்டுள்ள உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றம் கூறியவாறு, மத்திய அரசு செயல் திட்டத்தை (ஸ்கீம்) அமைக்க வேண்டும் என கூறியுள்ளது. அதாவது, காவிரி மேலாண்மை வாரியத்தையே உச்ச நீதிமன்றம் இவ்வாறு பயன்படுத்தியுள்ளது” என தெளிவுபடுத்தினர்.

அதற்கு பின்பும் ம‌த்திய அமைச்சர்களும், நீர்வளத்துறை அதிகாரிகளும் ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தாமல், ‘செயல் திட்டம்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தெளிவான வார்த்தை பிரயோகத்தை கூட, புரியாதது போல மத்திய அரசு நடிப்பது கண்டிக்கத்தக்கது என தமிழக விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x