Last Updated : 21 Mar, 2018 08:25 AM

 

Published : 21 Mar 2018 08:25 AM
Last Updated : 21 Mar 2018 08:25 AM

தமிழகத்தில் ரத யாத்திரைக்கு ஆதரவு மட்டும்தான் அளிக்கிறோம்: விஷ்வ இந்து பரிஷத் விளக்கம்

தமிழகத்தில் நேற்று நுழைந்துள்ள ரத யாத்திரையை தாங்கள் நடத்தவில்லை என்றும் ஆதரவு மட்டுமே அளிப்பதாகவும் விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) தலைமை நிலைய செய்தித் தொடர்பாளர் சரத் சர்மா அறிவித்துள்ளார்.

உ.பி.யின் அயோத்தியில் உள்ள விஎச்பி தலைமை நிலையத்தில் இருந்து, இதுகுறித்து சரத் சர்மா ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழகத்தில் நுழைந்துள்ள ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு தமிழக சட்டப்பேரவையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சியின் தமீமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு உட்பட 3 எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். இவர்களது செயல் பாகிஸ்தான் ஏஜெண்டுகளை போல் உள்ளது. இந்த ரத யாத்திரையின் மூலம் தமிழகத்தில் உருவாகக் கூடிய ஒற்றுமை குறித்தே இந்த மூவருக்கும் மற்றும் சில அமைப்பினருக்கும் அச்சம் எழுந்துள்ளது.

மகாத்மா காந்தி கூட ராமராஜ்ஜியம் நாட்டின் வளர்ச்சிக்கானது எனக் கூறியுள்ளார். இதை அமைக்க முயன்ற காந்திக்கு பலன் கிடைக்கவில்லை. பகவான் ராமர் வனவாசத்தை தமிழகத்திலும் செலவிட்டிருந்தார். ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் அமைத்து அங்கிருந்துதான் ஸ்ரீலங்கா சென்றார். ராமர் தனது ஆட்சியில் மக்களுக்கு செய்ததை இன்றைய அரசியல் கட்சி எதனாலும் செய்ய முடியாது. அவருக்கு அரச பதவி கிடைத்த போதிலும் அதை ஏற்காமல் வனவாசம் பூண்டார். வனவாசம் முடித்துத் திரும்பிய பின்பும் பதவிக்கு ராமர் முக்கியத்துவம் அளிக்கவில்லை.

ஸ்ரீராமதாசா மிஷன் யுனிவர்சல் சொசைட்டியின் சாதுக்களும் சமூக வளர்ச்சிக்கானவர்கள். அவர்களும் ராமர் கோயில் அமைக்க விரும்புகிறார்கள். இந்த யாத்திரையால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பல்வேறு யோசனைகளைத் தமிழக அரசு முன் அவர்கள் வைத்திருந்தார்கள். தற்போது அங்கு ரத யாத்திரை நடைபெறுவது போல் இதற்கு முன்பும் பல சாதுக்கள் தமிழகத்தில் சமூக வளர்ச்சிக்காக தர்ம யாத்திரை நடத்தியுள்ளனர். இதுபோன்றவர்களை அபாயகரமானவர்கள் என்று கூறி, மதச்சாயம் பூச முயற்சிப்பது தவறு.

இந்த ரத யாத்திரை பல ஆண்டுகளாக வேறு பாதைகள் வழியாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை விஎச்பி நடத்தவில்லை, அதற்கு ஆதரவு மட்டுமே அளிக்கிறது.

இவ்வாறு சரத் சர்மா தெரிவித்தார்.

சத்குரு சுவாமி சத்யானந்த சரஸ்வதி என்பவரால், ஸ்ரீராமதாசா மிஷன் யுனிவர்சல் சொசைட்டி 1991-ல் கேரளாவின் செங்கோட்டுக்கோணத்தில் நிறுவப்பட்டது. இவர் கடந்த 2006-ல் ஜீவசமாதி அடைந்தார். அவருக்கு 30 ஆண்டுகளாக தொண்டு செய்து வந்த ஸ்ரீசக்தி சந்தானந்த மகரிஷி (57) என்பவர்தன் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள ரத யாத்திரையை முன்னிறுன்று நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் தலைமையகம் மும்பையில் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 28 ஆண்டுகளாக இந்த அமைப்பின் சார்பில் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இது தமிழகத்திற்கு வருவதும் புதிதல்ல. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் கன்னியாகுமரி வழியாக கேரளத்தில் நுழைவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. சிலசமயம் ராமேஸ்வரத்திலும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சேலம் வழியாகவும் இந்த ரத யாத்திரை சென்றுள்ளது. இந்த ஆண்டு அயோத்தியில் விஎச்பி தலைமையகம் அமைந்துள்ள கரசேவக்புரத்தில் இருந்து பிப்ரவரி 13-ல் கிளம்பியது. மார்ச் 25-ல் முடியும் இந்த யாத்திரையை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்கவிருந்தார். ஆனால் வடகிழக்கு மாநில தேர்தலை மனதில் வைத்து, அதை விஎச்பி பொதுச்செயலாளர் சம்பத்ராய் தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x