Published : 21 Mar 2018 07:37 AM
Last Updated : 21 Mar 2018 07:37 AM

இசைத்துறையில் சாதனை படைத்த இளையராஜா, முஸ்தபா கானுக்கு பத்ம விபூஷண் விருது: டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

இசையமைப்பாளர் இளையராஜா, ஹிந்துஸ்தானி பாடகர் குலாம் முஸ்தபா கான், ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவ ரான பி.பரமேஸ்வரன் உள்ளிட்ட 43 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று மாலை இந்த விழா நடந்தது.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம், குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. இந்த ஆண்டும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படும் என கடந்த ஜனவரி 25-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இசையமைப்பாளர் இளையராஜா உட்பட 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதும் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் ராமச்சந்திர நாகசாமி உட்பட 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும் தமிழக நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டன.

இந்த விருதுகள் 2 பிரிவாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மார்ச் 20-ம் தேதி 43 பேருக்கும், ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறும் விழாவில் மீதமுள்ளவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந் தது.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பிரபலமானவர்களுக்கும், பலரால் அறியப்படாத கலைஞர்களுக்கும் சமூக சேவை செய்து வருபவர்களுக்கும் வழங்கப்பட்டன. ஏழை மக்களின் நலனுக்காக பாடுபட்டவர்கள், இலவசப் பள்ளிகளை ஏற்படுத்தியவர்கள், உலக அளவில் பழங்குடியினர் கலைகளை பிரபலப்படுத்தியவர்கள் என பலர் பத்ம விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் 43 பேருக்கு பத்ம விருதுகள் வழங் கும் விழா நடைபெற்றது. முதலில் 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெறுபவர்களில் முதல் நபராக இசையமைப்பாளர் இளையராஜா பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து ஹிந்துஸ்தானி பாட கர் குலாம் முஸ்தபா கான், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பி. பரமேஸ்வரன் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து 4 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. கேரளாவைச் சேர்ந்த பேராயர் பிலிப்போஸ்மர் கிறிசோஸ்தம், வரலாற்று ஆய்வாளர் டாக்டர் ராமச்சந்திர நாகசாமி, சட்ட வல்லுநர் வேத் பிரகாஷ் நந்தா, ஹிந்துஸ்தானி இசைக் கலைஞரும் சிதார் இசைக்கலைஞருமான பண்டிட் அரவிந்த் பாரிக் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

இதன் பின்னர் பத்மஸ்ரீ விருது கள் வழங்கப்பட்டன. 500-க்கும் மேற்பட்ட மூலிகை மருந்துகளைத் தயார் செய்து ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் கேரளாவைச் சேர்ந்த லஷ்மிக்குட்டி, ஓவியக் கலைஞர் பஜ்ஜு ஷியாம், பேராசிரியர் அரவிந்த் குமார் குப்தா, டென்னிஸ் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், மேற்கு வங்கத்தில் ஏழை மக்களுக் காக மருத்துவமனை கட்டி உதவி வரும் கூலித் தொழி லாளி சுபாஷிணி மிஸ்திரி, எழுத்தாளர் அரூப் குமார் தத்தா, பிளாஸ்டிக் சாலை அமைத்து முன்னோடியாக திகழும் தமிழகத்தின் ராஜகோபாலன் வாசுதேவன், காஷ்மீரைச் சேர்ந்த நாடகக் கலைஞர் பிரான் கிஷோர் கவுல், கர்நாடகாவில் மருத்துவச் சேவை செய்து வரும் சுலகட்டி நரசம்மா உள்ளிட் டோர் பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவரிடமிருந்துபெற்றுக் கொண்டனர்.

தமிழகத்தைச் சேர்ந்த யோகா ஆசிரியர் நானம்மாள் சக்கர நாற்காலியில் வந்து பத்மஸ்ரீ விருதைப் பெற்றுக்கொண்டார். 80 ஆண்டுகளுக்கும் மேலாக நாள் தவறாது யோகா பயிற்சி செய்வதுடன், 600-க்கும் மேற்பட்ட யோகா மாஸ்டர்களை உருவாக்கியவர் 98 வயது நானம் மாள் என்பது குறிப்பிடத் தக்கது.

நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர் எல். கே. அத்வானி, மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x