Last Updated : 18 Mar, 2018 04:35 PM

 

Published : 18 Mar 2018 04:35 PM
Last Updated : 18 Mar 2018 04:35 PM

பத்ம விருதுக்காக தமிழகம் பரிந்துரைத்த 6 பேரின் பெயர்களையும் நிராகரித்த மத்திய அரசு

 

பத்ம விருதுகளுக்காக தமிழக அரசு பரிந்துரைத்த 6 பேரின் பெயர்களையும் மத்திய அரசு நியமித்த குழுவினர் நிராகரித்துள்ளது தெரியவந்துள்ளது.இதேபோல், 8 மாநிலங்கள், 7 ஆளுநர்கள், 14 மத்திய அமைச்சர்கள் பரிந்துரைத்த பெயர்களையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2018ம் ஆண்டு பத்ம விருதுகளுக்காக நாட்டில் உள்ள மாநில அரசுகள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் என 35 ஆயிரத்து 595 பேரை பரிந்துரை செய்து இருந்தனர். இந்த விருதுக்கு தகுதியான 84 பேர் தேர்வு செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 25-ம்தேதி அறிவிக்கப்பட்டது. இதில் 3 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது.

இந்த விருதுக்கு தகுதியானவர்களை உள்துறை அமைச்சகத்தின் 19 பேர் கொண்ட சிறப்பு குழு தேர்வு செய்தது.

இந்தவிருதுகளை மார்ச் 20ம் தேதியும், ஏப்ரல் 2-ம் தேதியும் குடியரசு தலைவர் மாளிகையில் நடக்கும் விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார்.

பத்ம விருதுக்கு பல்வேறு மாநிலங்கள் சார்பில் சிறந்தவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தன. இதில் தமிழகம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, உத்தரகாண்ட், பிஹார், ராஜஸ்தான், டெல்லி மாநில அரசுகள் பரிந்துரைத்த யாவரின் பெயரும் ஏற்கப்படவில்லை, அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.

இதில் தமிழக அரசு சார்பில் 6 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. அதேபோல ஹரியான அரசின் 5 பரிந்துரைகள், ஜம்மு காஷ்மீர் அரசின் 9 பரிந்துரைகள், கர்நாடகவின் 44 பெயர்கள், உத்தரகாண்ட் மாநிலத்தின் 15 பரிந்துரைகள், பிஹார் அரசின் 4, ராஜஸ்தான் மாநிலத்தின் 4 பரிந்துரைகள், டெல்லிஅரசு 7 பேரின் பெயர்களையும் பரிந்துரை செய்தன. ஆனால், அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.

இதேபோல, மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி 11 பரிந்துரைகள், ஹரியானா ஆளுநர் கப்தன்சிங் சோலங்கி 7, ஜம்மு காஷ்மீர் என்.என் வோரா 7 பரிந்துரைகள், உத்தரப்பிரதேசம் ஆளுநர் ராம்நாயக் 10 பரிந்துரைகள் ஆகியவை நிராகரிக்கப்பட்டன.

மேலும், குஜார் ஆளுநர் ஓ.பி. கோலி 2 பரிந்துரைகள், கேரள ஆளுநர் சதாசிவம் 2 பரிந்துரைகள், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் ஒருப ரிந்துரையும் நிராகரிக்கப்பட்டன.

மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி(1), மேனகா காந்தி(4), பிரகாஷ் ஜவடேகர்(6), ராம் விலாஸ் பாஸ்வான்(4), சுரேஷ்பிரபு(12), தவார் சந்த் கெலாட்(16) ஆகியோரின் பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை.

மேலும், அர்ஜுன் ராம் மேக்வால்(4), அஸ்வினி குமார் சவுபே(2), சி.ஆர் சவுத்ரி(3), ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி(2), கிரிராஜ் சிங்(2), மகேஷ் சர்மா(4), முக்தர் அப்பாஸ் நக்வி(2), ராம் கிர்பால் யாதவ்(4) ஆகியோரின் பரிந்துரைகளும் நிராகரிக்கப்பட்டன.

மேலும், அசாம் மாநிலம் 12 பரிந்துரைகளில் ஒன்று ஏற்கப்பட்டது. சட்டீஸ்கரில் 13க்கு ஒன்று, உத்தரப்பிரதேச அரசின் 7 பரிந்துரைகளில் ஒன்று, மத்தியப் பிரதேசத்தின் 9 பரிந்துரைகளில் ஒன்று, கேரளாவின் 41 பரிந்துரைகளில் ஒன்று, மஹாராஷ்டிராவின் 84 பரிந்துரைகளில் 3 மட்டும் ஏற்கப்பட்டன.

மேலும், கோவா முதல்வர் மனோகரி பாரிக்கரின் 2 பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன. சட்டீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங்கின் 8 பரிந்துரைகளில் ஒன்று மட்டும் ஏற்கப்பட்டது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x