Last Updated : 18 Mar, 2018 03:05 PM

 

Published : 18 Mar 2018 03:05 PM
Last Updated : 18 Mar 2018 03:05 PM

2016-ல் குழந்தைகள் கடத்தல், பலாத்காரம் 11 சதவீதம் அதிகரிப்பு: 10 ஆண்டுகளில் 500 மடங்கு உயர்வு-என்சிஆர்பி தகவல்

கடந்த 2015ம் ஆண்டைக்காட்டிலும், 2016-ம் ஆண்டில் குழந்தைகள் கடத்தல், பலாத்காரம் ஆகியவை 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த 2016ம் ஆண்டில், குழந்தைகளுக்கு எதிராக 12 ஆயிரத்து 786 குற்றங்கள் கூடுதலாக நடந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் 94 ஆயிரத்து 172 குற்றங்கள் நடந்த நிலையில், 2016-ம் ஆண்டில் 11 சதவீதம் அதிகரித்து ஒருலட்சத்து 6 ஆயிரத்து 958 குற்றங்கள் நடந்துள்ளன.

இது குறித்து சிஆர்ஒய் எனப்படும் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் கோமல் கங்கோத்ரா கூறியதாவது:

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களான கடத்தல், பலாத்காரம் ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் 500 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு 18 ஆயிரத்து 867 குற்றங்கள் இருந்தநிலையில், 2016ம் ஆண்டில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 958 ஆக அதிகரித்துள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தீவிரமாக அதிகரித்துள்ளது. அதேசமயம் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளதையும், போலீஸார் தீவிரமாக பணியாற்றுகிறார்கள் என்பதையுமே காட்டுகிறது. அப்படி இருந்தும் குழந்தைகள் தொடர்ந்து பாலியல் பலாத்காரத்துக்கு இரையாகி வருகிறார்கள்.

நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதில் 50 சதவீதம் உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கத்தில்தான் நடக்கின்றன.

கடந்த 2016ம் ஆண்டு அறிக்கையின்படி, உத்தரப்பிரதேசத்தில் 15சதவீத குற்றங்களும், மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசத்தில் முறையே 14,13 சதவீத குற்றங்கள் நடக்கின்றன. குறிப்பாக குழந்தைகளைக் கடத்துதல் குற்றமே முதலிடத்தில் இருக்கிறது. ஏறக்குறைய 2016ம் ஆண்டில் 52 ஆயிரத்து 253 கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன.

அடுத்ததாக குழந்தைகளை பாலியல்பலாத்காரம் செய்வதாகும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 13சதவீதம் பலாத்காரமும், அதில் 33 சதவீதம் 12வயதுக்குட்பட்ட குழந்தைகளாகும்.

இதிலும் உத்தரப்பிரதேச மாநிலமே முதலிடத்தில் இருக்கிறது. குழந்தைகள் கடத்தல், பலாத்காரத்திலும் அந்த மாநிலம் மோசமாக இருக்கிறது. அடுத்தார்போல், மஹாராஷ்டிராவும், மத்தியப் பிரதேசமும் இருக்கின்றன.

கடந்த 2016-ம் ஆண்டில், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 569 குழந்தைகள் காணாமல் போய் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது இதில், 41 ஆயிரத்து 175 சிறுவர்கள், 70 ஆயிரத்து 394 சிறுமிகள் ஆவர். இதில் அதிகபட்சமான வழக்குகள் அதாவது 15.1சதவீதம் மேற்குவங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 55 ஆயிரத்து 944 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள.

குழந்தைகள் பாதுகாப்பு என்று எடுத்துக்கொள்ளும் போது, உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்தியப்பிரதேச மாநிலங்கள் மிகவும் கவலை கொள்ளும் நிலையில் இருக்கின்றன. இங்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குழந்தைகள் பாதுகாப்புக்கு கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்தபோதிலும், அதை முறையாக நடைமுறைப்படுத்தாததால், குற்றங்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x