Published : 16 Mar 2018 06:39 PM
Last Updated : 16 Mar 2018 06:39 PM

பட்டனை அழுத்துங்க.. சாலையை எளிதாக கடங்க: மும்பையில் புதிய முறை அறிமுகம்

மும்பையில் பரபரப்பான சாலைகளில் எளிதாக சாலையை கடக்கும் வகையில், மக்களே சிக்னலை மாற்றும் பட்டனை மாநகராட்சி கொண்டுவந்துள்ளது.

சாலையை கடப்பது என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவனத்துடன் மேற்கொள்ள வேண்டியதாகும். அதிலும் பரபரப்பான காலை, மாலை நேரத்தில் விபத்துகளில் சிக்கிவிடாமல் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பாதசாரிகளின் இந்த பதற்றத்தையும், காத்திருப்பையும் குறைக்கும் வகையில் நடந்து செல்லும் மக்களே சிக்னலை மாற்றி சாலையை கடக்கும் முறை சோதனை முயற்சியாக மும்பையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நவி மும்பை மாநகராட்சி பகுதிகளில் முக்கிய சிக்னல்களில் பாதசாரிகள் பயன்படுத்தும்வகையில் ஒரு பெட்டியில் பட்டன் வைக்கப்பட்டுள்ளது.

சாலையை கடக்கும் மக்களில் யாராவது ஒருவர் அந்த பட்டனை அழுத்தினால், சிக்னலில் சிவப்பு விளக்கு எரியத்தொடங்கும். அதன்பின் மக்கள் அனைவரும் எளிதாக சாலையை கடக்கலாம்.

சாலையை கடக்கும் போது வாகனங்கள் மோதிவிடுமோ என்ற அச்சமும் தேவையில்லை. இதன் மூலம் மக்கள் சாலை கடக்கும்போது, இந்தபட்டனை அழுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு எளிதாகக் கடந்து செல்ல முடியும். இந்த முறையை நவி மும்பையில், டிமார்ட், சுவாமிவிவேகானந்தா சவுக், கொப்பார் பகுதிகளில் சோதனை முயற்சியாக வைக்கப்பட்டது.

இதில் சாதகமான முடிவுகளும் மக்களிடையே வரவேற்பும் கிடைத்ததையடுத்து, புருஷோத்தம் கேதர் சவுக், சுவாமி சம்ரத் சவுக், ஏரோலி, தானே-பேலாபூர், முகுந்த் கம்பெனி, ரபானே ஜங்ஷன் ஆகிய இடங்களிலும் இந்த சிக்னல் பட்டன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டன் வைக்கப்பட்ட இரு நாட்களில் மக்கள் தங்களின் தேவைக்கு ஏற்றார்போல் பட்டனை அழுத்தி சாலையை கடந்து சென்றனர். இந்த முறையை சாலையை கடக்க வசதியாக இருப்பதாகவும் மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து நவிமும்பை மாநகராட்சி ஆணையர் என்.ராமசாமி கூறுகையில், ‘ போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதில் போக்குவரத்து சிக்னல் மிகவும் முக்கியமானதாகும். அதிலும் காலை, மாலை பள்ளி நேரத்தில் ஏராளமான மாணவர்கள், அலுவலகத்து செல்பவர்களும் சாலையை கடக்க மிகுந்த சிரமப்படுவார்கள். அதிலும் குறிப்பாக கர்ப்பிணிகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் சிரமப்படுவார்கள்.

இதைத் தவிர்க்கும் வகையில், 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒவ்வொரு சிக்னல் கம்பத்தின் அருகே ஒரு சிறிய பெட்டியில் ஒரு பட்டனை பொருத்தினோம்.

அந்த பட்டனை பாதசாரிகள் யார் வேண்டுமானாலும் அழுத்தினால், சிவப்பு விளக்கு எரிந்து சாலையை எளிதாகக் கடக்க முடியும். சாலையை கடப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்துக்குள் கடந்தபின் தானாகவே பச்சை விளக்கு எரியத்தொடங்கும்.

இந்த திட்டத்தின் மூலம், நடந்து செல்பவர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட்டு அவர்கள் எளிதாக நடந்து செல்லவும், சாலையைக் கடக்கவும் வழிவகுக்கிறது. இந்த முறைக்கு பாதசாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x