Last Updated : 15 Mar, 2018 06:24 PM

 

Published : 15 Mar 2018 06:24 PM
Last Updated : 15 Mar 2018 06:24 PM

மக்களவை ஒத்திவைப்பு: காகிதத்தை கிழித்து எறிந்து எம்.பி.க்கள் அமளி: விவாதமின்றி 2 மசோதாக்கள் நிறைவேற்றம்

 

மக்களவையில் தொடர்ந்து 9-வது நாளாக இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். காகிதங்களை கிழித்து எறிந்து கூச்சலிட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், இன்றும் விவாதமின்றி இரு மசோதாக்கள் நிறைவேறின.

மக்களவை இன்று முதலில் நண்பகல் வரையிலும், பின்னர் எம்.பி.க்களின் தொடர் அமளியால், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நாள் முழுவதும் அவையை ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையிலும் எம்.பி.க்கள் கூச்சலில் ஈடுபட்டதால், 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், நிதி மசோதா, நிதி ஒதுக்கீடு மசோதா ஆகியவை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

மக்களவை தொடங்கியவுடன், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் மக்களவையில் பெரும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்து ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு கோரியும், தெலங்கானாவுக்கு இடஒதுக்கீடு கோரியும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி அதிமுக எம்.பி.க்களும், வங்கி மோசடி தொடர்பா பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்களும் ஆவேசமாக கோஷமிட்டனர். மேலும், கையில் வைத்திருந்த காகிதங்களை கிழித்து எறிந்து கோஷமிட்டனர்.

இந்த கூச்சலுக்கு இடையே பணிக்கொடை செலுத்துதல் திருத்த மசோதா, குறிப்பிட்ட நிவாரண திருத்த மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இரு மசோதாக்களும் எந்த விதமான விவாதமின்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியதாக அவைத்தலைவர் மகாஜன் அறிவித்தார்.

எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கியவுடன் சபாநாயகர் சுமித்ரா கேள்வி நேரத்தை எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் எம்.பி. ஜோதிர்தயா சிந்தியா தலைமையில் எம்.பி.க்கள், அவையின் நடுப்பகுதியில் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.

கூச்சலுக்கு இடையே எழுந்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார் பேசினார். அவர் பேசுகையில், ''அவையை நடத்துவதற்கு எம்.பி.க்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மகா பஞ்சாயத்து நடக்கும் மன்றமாக நாடாளுமன்றம் மாறிவிட்டது.

எந்த விவாதங்களும் நடக்காமல், முக்கிய விவாதங்கள் பேசப்படாமல், முடக்கப்படுகின்றன. வங்கி மோசடி, காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து ஆகியவை குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது'' என்று பேசினார்.

ஆனால், தொடர்ந்து எம்.பி.க்கள் கோஷமிட்டதால், அவையை நண்பகல் 12 மணி வரை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடியபோது எம்.பி.க்கள் தொடர்ந்து முழுக்கமிட்டு, கூச்சலிட்டதால் அவையை நாள்முழுவதும் அவர் ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையிலும் இதை சூழல்தான் நீடித்தது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பெரும் அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் வரை இரு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதன்பின், நாள் முழுவதும் ஒத்திவைத்து துணை சபாநாயகர் பி.ஜே.குரியன் உத்தரவிட்டார்.

இருமுறை அவை ஒத்திவைக்கப்பட்ட பின் நண்பகலுக்கு பின் மாநிலங்களவை 3 மணிஅளவில் மீண்டும் கூடியது. அப்போது, அதிகமுக, காங்கிரஸ், தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

எம்.பி.க்களை அமைதியாக இருக்கும்படியும், இருக்கையில் அமரும்படியும் துணைத்தலைவர் பி.ஜே.குரியன் கூறினார். நிதி மசோதா, நிதி ஒதுக்கீடு மசோதா விவாதத்துக்கு எடுக்க வேண்டும், 5 நிமிடங்கள் அமைதியாக இருங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால், 5 நிமிடங்களில் இந்த மசோதாக்கள் எதையும் நிறைவேற்ற முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.

இதனால், எம்.பி.க்கள் தொடர்ந்து கூச்சலிலிட்டு, அமளியில் ஈடுபட்டதால், அவையை நாள்முழுவதும் ஒத்திவைத்து துணைத்தலைவர் குரியன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x