Last Updated : 14 Mar, 2018 07:45 PM

 

Published : 14 Mar 2018 07:45 PM
Last Updated : 14 Mar 2018 07:45 PM

தோல்வியை ஏற்கிறேன்; சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி வளர்ச்சியை தடுத்துவிடும்: யோகி ஆதித்யநாத் தாக்கு

 

பூல்பூர், கோரக்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் எங்களுக்கு கிடைத்த தோல்வியை ஏற்கிறேன். இந்த தோல்வியை பாஜக பாடமாக எடுத்துக்கொள்ளும், ஆனால், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி வளர்ச்சியை தடுத்துவிடும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வேதனை தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், பூல்பூர், கோரக்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளில் சமாஜ்வாதிக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக வேட்பாளர் கவுசலேந்திர சிங் பாட்டீலை 59 ஆயிரத்து 460 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் தோற்கடித்தார்.

கோரக்பூரில் பாஜக வேட்பாளர் உபேந்திர தத் சுக்லாவை 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன் நிஷாத் வெற்றி பெற்றார். பாஜகவின் கோட்டை என கருதப்பட்ட கோரக்பூரில் அந்தக் கட்சி தோல்வி அடைந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து முதல்வர் யோகி ஆத்தியநாத் லக்னோவில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

பூல்பூர், கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் எங்களுக்கு கிடைத்த தோல்வியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மக்கள் அளித்துள்ள இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம். இந்த முடிவு நாங்கள் எதிர்பார்க்காதது. விரைவில் இந்த தோல்வியையும், எங்களையும் சுய பரிசோதனை செய்து மீண்டு வருவோம். வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

இந்தத் தேர்தலின் தொடக்கத்தில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தனித்தனியாக இருந்தார்கள். ஆனால், திடீரென தேர்தலின் நடுப்பகுதியில் கூட்டணி அமைத்துள்ளனர்.

அதீத நம்பிக்கை மற்றும் இயலாமையும் தேர்தலில் சமாஜ்வாதி, பகுபஜ் சமாஜ் கட்சிகளின் கூட்டணியை புரிந்து கொள்ளமுடியாமல் போனது. இதனால், தேர்தலில் தோல்வி அடைந்தோம். ஆனால், மாநிலத்தில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணியில் இருந்தால், நாட்டின், மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளை நிறுத்திவிடுவார்கள். இதற்கு அரசியல் ரீதியாக எதிர்வினையாற்றுவோம்.

இந்த இடைத் தேர்தலையும், 2019-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலையும் ஒப்பீடு செய்ய முடியாது. இடைத் தேர்தல் என்பது உள்ளூர் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து நடத்தப்படுவது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் என்பது, தேசிய பிரச்சினைகளை, விஷயங்களை அடிப்படையாக வைத்து நடத்தப்படுவது. பிரதமர் மோடியின் தலைமையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x