Published : 14 Mar 2018 05:48 PM
Last Updated : 14 Mar 2018 05:48 PM

தரமான நிர்வாக நகரங்கள் பட்டியல்: சென்னைக்கு 19-வது இடம்; புனே முதலிடம்

தரமான நிர்வாகம் அளிக்கும் 23 நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகரம் 19-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேமயம், மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரம், மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தா, கேரளாவின் திருவனந்தபுரம், ஒடிசாவின் புவனேஷ்வர் நகரம் ஆகியவை முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்திய நகர அமைப்பு முறைகள் குறித்த ஆண்டு ஆய்வு (ஏஎஸ்ஐசிஎஸ்) என்ற பெயரில் குடியுரிமை மற்றும் ஜனநாயகத்துக்கான ஜனகிரஹா மையம் 23 நகரங்களில் ஆய்வு நடத்தியது.

மாநகரங்கள் பற்றியும், நிர்வாகம், சுகாதாரம்,சட்டம் ஒழுங்கு, கொள்கைகள், செயல்பாடு, உள்ளிட்ட பிற வசதிகள் குறித்து 89 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.

இந்த கேள்விகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு இருந்தன. அதில் நகர திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு, நகர வளங்கள் மற்றும் திறன்கள், வெளிப்படைத்தன்மை ,நம்பகத்தன்மை மற்றும் பங்களிப்பு, அதிகாரமளித்தல் மற்றும் சட்டப்பூர்வ அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய பிரிவுகள் தரப்பட்டு இருந்தன.

ஒவ்வொரு பிரிவு கேள்விகளுக்கு 10 மதிப்பெண்கள் தரப்பட்டு இருந்தன. இதில் புனே நகரம் 5.1 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்றது. 3.3 மதிப்பெண்களுடன் சென்னை 19-வது இடத்தில் உள்ளது. 3 மதிப்பெண்களுடன் பெங்களூரு கடைசி இடத்தைப் பிடித்தது.

டெல்லி 6வது இடத்திலும், ஹைதராபாத் 8-வது இடத்திலும், மும்பை 9-வது இடத்திலும் உள்ளன.

இந்த சர்வே மூலம் 5 முக்கியப் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதைத் தீர்க்கும் ஆலோசனைகள், உள்ளாட்சி நிர்வாக குழப்பத்துக்கு ஆலோசனைகள், மத்திய, மாநில அரசின் செயல்பாடுகள் ஆகியவை தரப்பட்டுள்ளன.

மேலும், இந்த அறிக்கையில், இந்திய நகரங்கள் எந்த அளவுக்கு மிக பலவீனமான நகர திட்டமிடலில் இருக்கின்றன, எவ்வாறு தீர்வு காண்பது, திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பிரச்சினையாக நிதி ஸ்திரத்தன்மை குறித்து இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரங்கள் 39 சதவீத நிதியை மட்டுமே உருவாக்கி, அதை செலவு செய்கின்றன, இதன் காரணமாக ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட நகரங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூட ஊதியம் முறையாக தரப்படவில்லை என்பது தெரியவருகிறது.

3-வது பிரச்சினை திறமையான ஊழியர்கள் இல்லாததும், மனித வளத்தை மோசமாக நிர்வாகம் செய்தல் முக்கிய பிரச்சினையாகும். மேயர்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் முறையான அதிகாரம் அளிக்கப்படாமல் இருத்தலால் சிறந்த நிர்வாகத்தை கொண்டு வரமுடியாததற்கு காரணமாகுமாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக நகரம் தொடர்புடைய வளர்ச்சிப்பணிகள் எதிலுமே அந்த நகரத்தின் குடிமக்கள் பங்கேற்காமல் இருப்பதும், அதற்கான முயற்சிகள் எடுக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் இந்த ஆய்வு அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x