Published : 14 Mar 2018 02:58 PM
Last Updated : 14 Mar 2018 02:58 PM

‘‘பாஜகவின் முடிவு தொடங்கி விட்டது’’ - கோரக்பூர் இடைத்தேர்தல் பற்றி மம்தா ட்வீட்

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதி இடைத் தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளதன் மூலம் பாஜகவின் முடிவு தொடங்கி விட்டது என மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர், மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர்.

எனவே காலியாக உள்ள இந்த இரு தொகுதிகளுக்கும் சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதே போன்று பிஹார் மாநிலத்தில் உள்ள அரேரியா மக்களவை தொகுதிக்கும் ஜகனாபாத், பபுவா ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் கோரக்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் உபேந்திர சுக்லாவை விடவும், சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீண் குமார் 20 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

பூல்பூர் தொகுயில் சமாஜ்வாதி கட்சியின் நாகேந்திர பிரதாப் சிங் படேல் 22 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

பிஹாரில் அரேரியா மக்களவை தொகுதியில் பாஜகவை விடவும், ராஷ்ட்ரீய ஜனதாதள வேட்பாளர் 23 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அங்குள்ள பபுவா சட்டப்பேரவை தொகுதியில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அதேசமயம் ஜகனாபாத்தில் எதிர்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதாதளம் முன்னிலை பெற்றுள்ளது.

கோரக்பூர் தொகுதி நீண்டகாலமாக யோகி ஆதித்யநாத் எம்.பியாக இருந்த தொகுதி. இந்த தொகுதியில் சமாஜ்வாதி முன்னிலை பெற்றுள்ளதன் மூலம் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதுபோலவ உத்தரப் பிரதேசத்தில் உள்ள பூல்பூர் மற்றும் பிஹார் மாநிலம் அரேரியா தொகுதியிலும் பாஜக தோல்வி முகத்தில் உள்ளது.

இதுகுறித்து மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ட்வீட் செய்துள்ளார்.

அதில் ‘‘இது மிகப்பெரிய வெற்றி. மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவுக்கு எனது வாழ்த்துக்கள். முடிவு தொடங்கி விட்டது’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x