Published : 14 Mar 2018 12:50 PM
Last Updated : 14 Mar 2018 12:50 PM

ட்ரம்பைக் காட்டிலும் பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் ‘போலி பாலோவர்ஸ்’ அதிகம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் காட்டிலும், ட்விட்டரில் பிரதமர் மோடிக்குதான் போலியாக கணக்குவைத்து பின்தொடர்பவர்கள் ( பாலோவர்ஸ்) அதிகம் என்று ட்விட்டர் ஆடிட் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

உலக அளவில் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் மிகவும் புகழ் பெற்ற தலைவர்களாக வலம் வருபவர்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் மோடியும் குறிப்பிடத்தகுந்தவர்களாவர். இதில் ட்ரம்பைக்காட்டிலும் மோடிக்கு ட்விட்டரில் பின்தொடர்பவர்கள் அதிகம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ட்விட்டர் கணக்கு குறித்து தணிக்கை செய்யும் ‘ட்விப்லமேசி’ அமைப்பு உலகத் தலைவர்களின் ட்விட்டரில் பின்தொடர்பவர்களில் எத்தனை சதவீதம் போலி, உண்மை என்பது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

ட்விப்லமேசி(Twiplomacy) என்பது, டிஜிட்டல் தளத்தில் சர்வதேச அமைப்புகள், அரசுகள் எந்த அளவுக்கு தங்கள் டிஜிட்டல் தளத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்து தணிக்கை செய்து அறிக்கை அளிக்கும் அமைப்பாகும்.

அதிபர் டிரம்ப்

இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு உலகம் முழுவதும் ட்விட்ரில் அவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 89 லட்சத்து 39 ஆயிரத்து 948 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் ட்ரம்பை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையில் 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 870 பேர் மட்டுமே உண்மையான கணக்கு உடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக, 37 சதவீதம் பேர் போலியான கணக்கு உடையவர்கள் எனத் தெரிவித்துள்ளது. அதாவது, மொத்தம் உள்ள 4.80 கோடி பின்தொடர்பவர்களில் ஒரு கோடியே 24 லட்சத்து 45 ஆயிரத்து 604 பேர் போலியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு ஆடிட் மதிப்பு 74 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி

அதேசமயம், கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் பிரதமர் மோடியின் புகழ் தீவிரமாக சமூக ஊடகங்களில் பரவியது. அதிலும் கடந்த 4 ஆண்டுகளில் பேஸ்புக், ட்விட்டரில் பன்மடங்கு பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து ட்விப்லமேசி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ட்விட்டரில் பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களில் 60 சதவீதம் போலியானவர்கள் எனத் தெரிவித்துள்ளது.

அதாவது, பிரதமர் மோடியை ட்விட்டரில் 4 கோடியே 9 லட்சத்து 93 ஆயிரத்து 53 பேர் பின்தொடர்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் ஒரு கோடியே 61 லட்சத்து 91 ஆயிரத்து 426 பேர் மட்டுமே உண்மையானவர்கள், மீதுமுள்ள அதில் 60 சதவீதம் அதாவது, 2 கோடியே 47 லட்சத்து 99 ஆயிரத்து 527 பேர் போலியானவர்கள் எனத் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ட்விட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையில் 31 சதவீதம் போலியானது எனத் தெரியவந்துள்ளது. ராகுல் காந்தியை பின்தொடர்பவர்களில்  3 கோடியே 69 லட்சத்து 6ஆயிரத்து 460 பேர்   போலி எனவும்,  ஒரு கோடியே 71 லட்சத்து 5 ஆயிரத்து 634பேர் மட்டுமே உண்மையானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

போப் ஆண்டர் பிரான்சிஸை ட்விட்டரில் பின் தொடர்பவர்களில் 59 சதவீதம் போலியானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 87.56 லட்சம் பேர் ட்விட்டரில் உண்மையான கணக்கு வைத்து இருப்பவர்கள் என்றும், 80 லட்சம் பேர் போலியான கணக்கு வைத்திருப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x