Last Updated : 13 Mar, 2018 07:10 PM

 

Published : 13 Mar 2018 07:10 PM
Last Updated : 13 Mar 2018 07:10 PM

தென் மாநிலங்களில் வரிவசூல் செய்து வடமாநில வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறது: பாஜக மீது சந்திரபாபு நாயுடு கடும் குற்றச்சாட்டு

தென் மாநிலங்களில் வரிவசூல் செய்து, வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு பாஜக அரசு பயன்படுத்துகிறது என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது, ஆந்திராவுக்கு சிறப்பு நிதித்தொகுப்பு தரப்படும், சிறப்பு அந்தஸ்து தரப்படும் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு உறுதியளித்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகள் ஆகியும், ஆந்திர மாநிலத்துக்கு எந்தவிதமான நிதித்தொகுப்பும் வழங்கப்படவில்லை.சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலும் அதற்கான அறிவிப்பு இல்லை.

இதையடுத்து, மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியின் இரு எம்.பி.க்கள் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி இன்னும் வெளியேறவில்லை என்ற போதிலும், விரிசல் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே தலைநகர் அமராவதியில் நேற்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தென் மாநிலங்களான கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள்தான் அதிமான வரிவசூல் செய்து மத்திய அரசுக்கு தருகின்றன. ஆனால், மத்திய அரசு தென் மாநிலங்களில் அளிக்கும் வரிவசூலை எடுத்துக்கொண்டு, வடமாநிலங்களின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்துகிறது. இதனால், மீண்டும் வடமாநிலம், தென் மாநிலங்கள் எனும் பிரிவு ஏற்படும் அச்சம் ஏற்படுகிறது.

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது, நமக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும், பாஜக அரசு நிறைவேற்றவில்லை. மாறாக ஆந்திர மாநிலத்தை நிராகரித்து விட்டது.

இந்தியாவில் ஆந்திர மாநிலம் இல்லையா என்று நான் கேட்கிறேன். ஏன் இப்படி பாகுபாடு காட்டப்படுகிறது. தொழில்துறைக்கான ஊக்கத்தொகை, ஜிஎஸ்டி மறுநிதி ஆகியவை மற்ற மாநிலங்களுக்கு அளிக்கப்படும் போது ஆந்திர மாநிலத்துக்கு மறுக்கப்படுகிறது.

மத்திய அரசின் பணம், மாநில அரசின் பணம் என்று எடுக்கக்கூடாது, மாறாக மக்களின் பணம் என்றே எடுக்க வேண்டும். தெலங்கானா மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டுதான் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கவில்லை என்று அருண் ஜேட்லி கூறுகிறார். அதே மக்களின் உணர்வுகளின் அடிப்படையில்தான் நாங்கள் சிறப்பு நிதித்தொகுப்பும், சிறப்பு அந்தஸ்தும் கேட்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் பேசிய சந்திரபாபு நாயுடு, தனது பேச்சின் போது, மத்திய அரசு குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் கடுமையாக ஏதும் விமர்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x