Last Updated : 13 Mar, 2018 06:39 PM

 

Published : 13 Mar 2018 06:39 PM
Last Updated : 13 Mar 2018 06:39 PM

கோடைகாலம் முதல் உ.பி. காவல்துறையின் சீருடையில் மாற்றம்

கோடைகாலம் முதல் உ.பி. காவல்துறையின் சீருடையில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது. இதன் மீதான ஆலோசனை கேட்டு உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள காவல்துறையினருக்கு ஆங்கிலேயர் காலத்தில் ஒரே மாதிரியான சீருடை இருந்தது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் மாற்றங்களை பரிந்துரை செய்து வந்தது. இந்த வகை மாற்றம் கடைசியாக கடந்த 2011-ல் மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனைத்து மாநிலங்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

காலப்போக்கில் அந்தந்த மாநிலங்கள் தம் வசதிக்கேற்றபடி சிறிய மாற்றங்களை செய்து கொள்கின்றன. எனினும், நிறமாற்றம் உட்பட முக்கிய மாற்றங்கள் எவரும் செய்வதில்லை. இந்தவகையில் தற்போது உ.பி. மாநில காவல்துறையினரின் சீருடையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

இதைப் பட்டியலிட்டு தம் எடிஜி, ஐஜி மற்றும் டிஐஜி பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. இதில் வரும் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு இறுதி மாற்றம் செய்து கோடையில் அமலாக்கப்பட உள்ளது.

இந்த மாற்றங்கள் குறித்து 'தி இந்து'விடம் உ.பி. காவல்துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ''புதிதாகப் பணியமர்த்தப்படும் காவலர்கள் தம் வசதிக்கேற்ப வெளியில் தெரியாதபடி சிறு மாற்றங்களை செய்து கொள்கின்றனர். உதாரணமாக முழுக்கை சட்டைகளை மடித்து அணிவதற்கு பதிலாக சற்றே நீளமான கைகளுடன் சட்டைகளை தைத்து அதை மடித்து அணிகின்றனர். இவர்கள் தவறுகளை கண்காணிப்பதை விட அவர்கள் பிரச்சினைகளை அறிந்து உரிய மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தனர்.

இந்த புதிய சீருடைகள் அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரி அல்லாதவர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் மற்றும் காவலர் ஆகியோருக்காக மட்டும் இருக்கும். இதில், முழுக்கைகள் உள்ள சட்டைகளுக்கு பதிலாக அரைக்கை அணியலாம். குளிர்காலங்களில் மட்டும் முழுக்கை அணியலாம்.

காக்கி நிறத்துணியில் கோடையை சமாளிக்கும் வகையில் அதிக சதவிகிதத்தில் பருத்தி கலப்பு அனுமதிக்கப்பட உள்ளது. சில நட்சத்திரங்கள் மற்றும் மாநில சின்னத்தை சட்டை அணிந்தபின் மாட்டப்படுகின்றன. இதை பலரும் அவசரத்தில் மறந்து விடுகின்றனர். இதை தவிர்க்க அவற்றை மாட்டுவதற்கு பதிலாக சட்டையில் நிரந்தரமாக எம்பிராய்டரி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், சட்டை மற்றும் பேன்ட் பாக்கெட்டுகளிலும், பெல்ட் அணியும் லூப்புகளிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. சட்டைகளை அவசரமாக அணியும் பொருட்டு பொத்தான்களுக்கு பதிலாக, அமுக்கினால் ஒட்டிக்கொள்ளும் வகையில் தைக்கப்பட்ட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x