Last Updated : 13 Mar, 2018 05:57 PM

 

Published : 13 Mar 2018 05:57 PM
Last Updated : 13 Mar 2018 05:57 PM

மார்ச் 31 காலக்கெடு நீட்டிப்பு: ஆதார் வழக்கில் தீர்ப்பு வரும் வரை இணைப்பை கட்டாயப்படுத்தக்கூடாது: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

ஆதார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை வங்கிக் கணக்கு, செல்போன் எண், உள்ளிட்ட பல்வேறு சேவைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அரசின் பல்வேறு சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போன், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை வரும் 31-ம்தேதி இறுதிநாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அரசின் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கும், ஆதார் சட்டத்துக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்குப்படுவதை எதிர்த்து வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஓய் சந்திரசூட், அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பரம் மாதம் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், செல்போன்,வங்கிக்கணக்குடன் ஆதார் இணைக்கும் காலக்கெடுவை 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம்தேதி வரை காலக்கெடு நீட்டித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த வாரம் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ‘ செல்போன் , வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடு மார்ச் 31-ம் தேதியுடன் முடிகிறது. இந்த காலக்கெடுவை நீட்டிக்க அரசு தயாராக இருக்கிறது. ஆனால், இந்த மாதத்துக்குள் மனுதாரர்கள் தங்கள் வாதத்தை முடிக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஓய் சந்திரசூட், அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் கடந்த 7-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில், ‘ அரசின் சேவைகளோடு ஆதாரை இணைக்கும் காலக்கெடு மார்ச் 31-ம் தேதி முடிகிறது. இந்த காலக்கெடுவை கடைசி நேரத்தில் நீட்டித்தால் பல்வேறு இடையூறுகள் சிக்கல் ஏற்படும். நிதிநிறுவனங்களான வங்கிகள், பங்குச்சந்தையில் பெரிய குழப்பத்தை உண்டாக்கும் எனத் தெரிவித்தனர்.

மேலும், கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி புட்டாசாமி தாக்கல் செய்த மனுவில், ‘ அரசின் சேவைகளைப் பெற ஆதாரை கட்டாயமாக்குவதன் மூலம் ரேஷன் பொருட்களைக் கூட மக்கள் சில நேரங்களில் வாங்க முடியாமல், பட்டினியால் இறக்கும் சம்பவம் நடக்கிறது’ எனத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஓய் சந்திரசூட், அசோக் பூஷன் ஆகியோர் முன் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், செல்போன், வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்கும் காலக்கெடு வரும் 31-ம்தேதியுடன் முடிகிறது என அரசு தெரிவித்துள்ளது. ஆனால், ஆதார் வழக்கில் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளிக்கும் வரை இதற்கு காலக்கெடு காலவரையின்றி நீட்டிக்கப்படுகிறது. அதேசமயம், தட்கல் மூலம் பாஸ்போர்ட் வழங்குபவர்களுக்கு ஆதார் கட்டாயம் என்று அரசு கட்டாயப்படுத்தவும் முடியாது

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x