Last Updated : 13 Mar, 2018 01:42 PM

 

Published : 13 Mar 2018 01:42 PM
Last Updated : 13 Mar 2018 01:42 PM

பாஜகவுக்கு விவசாயிகள் அளித்துள்ள கடைசி வாய்ப்பு: சிவசேனா காட்டம்

மஹாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு, விவசாயிகளிடம் அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றிக் கொடுக்க இதுதான் கடைசி வாய்ப்பாகும் என்று சிவசேனா கட்சி கடுமையாக சாடியுள்ளது.

வேளாண் கடன் தள்ளுபடி, மானியம் அளித்தல், காடுகளில் பழங்குடியினரின் பாரம்பரிய நிலங்களை திருப்பி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புனே நகரில் இருந்து மும்பை நோக்கி 50 ஆயிரம் விவசாயிகள் நடந்து வந்தனர். இவர்கள் சட்டப்பேரவையை முற்றுகையிட திட்டமிட்டிருந்தநிலையில், அவர்களுடன் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பேச்சு நடத்தினார். அதில் விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற வாக்குறுதி அளித்ததையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

விவசாயிகளின் இந்தப் போராட்டம் குறித்தும், மாநில அரசின் செயல்பாடுகள் குறித்தும் சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான ‘சாம்னா’வில் தலையங்கம் எழுதியுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

180 கி.மீ தொலைவு நடந்து வந்து தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்திய 35ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகளிடம் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு மற்றொரு அதிர்வை, அதிர்ச்சியை விவசாயிகள் தரப்பில் தரப்பட்டுள்ளது. வேறுவழியின்றி, மாநிலஅரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இருக்கிறது.

விவசாயிகளின் போராட்டம் குறித்து கவனத்தில் கொள்ளாமல் அரசாங்கத்தில் அமைதியாக, அமர்ந்திருந்தவர்கள், விவசாயிகளின் இந்த திடீர் போராட்டத்தைக் கண்டு அதிர்ந்துவிட்டனர். விவசாயிகளின் கோரிக்கைகளையும், கோபத்தையும் கண்டுகொள்ளாமல் இருந்த முதல்வர் தேவந்திர பட்நாவிஸும் அவரின் அரசும் இப்போது, சாதகமான பதிலை தெரிவித்து இருக்கிறது.

மும்பையில் விவசாயிகளின் போராட்டம் மிகவும் வலுவாக நடைபெற்றது. விவசாயிகளிடம் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசாளுபவர்களின் முகத்தில் விவசாயிகள் கொடுக்கும் அறை, எப்போதும் நினைவில் இருக்கும். எதிர்காலத்தில் விவசாயிகளின் வாழ்க்கையில் யாரும் விளையாடுவதற்கு முயற்சிக்க மாட்டார்கள்.

சத்ரபதி சிவாஜியின் பெயரைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள், கடந்த மூன்றரை ஆண்டுகளாக அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வருகிறார்கள், மக்களை நீதி கேட்டு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவு நடக்க வைக்கும் கட்டாயத்துக்கு ஆளாக்குகிறார்கள்.

முதல்வர் பட்நாவிஸ் தலைமையிலான பாஜக அரசுக்கு விவசாயிகள் கொடுத்திருக்கும் கடைசி வாய்ப்பாகும். அவர்களிடம் அளித்த வாக்குறுதிகளை முதல்வர் பட்நாவிஸ் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x